×

பிடிஆர் கால்வாய் பணிகள் தரமில்லை மக்கள் குற்றச்சாட்டு

தேனி, டிச.31:  தேனி அருகே உள்ள பிடிஆர் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தரமற்ற முறையில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேனி அருகே பாலகிருஷ்ணாபுரம் முதல் கோவிந்த நகரம், வெங்கடாசலபுரம், பூமலைகுண்டு, தர்மாபுரி உள்ளிட்ட கிராமங்களின் வழியாக உத்தமபாளையம்  பகுதி  வரை  சுமார் 20 கிலோமீட்டர் நீளத்திற்கு தந்தை பெரியார் பிடிஆர் கால்வாய் பாய்கிறது. இக்கால்வாய்  மூலம் பல ஆயிரம் ஏக்கர் நிலம்  பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் இக்கால்வாய் இருபுறமும் உள்ள மண் கரையையும் தண்ணீர் ஓடும் தளத்தையும் சிமெண்ட் கான்கிரீட் தளம் மூலம் அமைக்க பொதுப்பணித்துறை டெண்டர் விட்டுள்ளது. இதன்படி ரூ.20 கோடி மதிப்பீட்டில் இரு கரைகள் மற்றும் தண்ணீர் ஓடும் இருகரை நடுவிலும்   கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.கரையின் இரு புறத்தையும் வலுப்படுத்தாமல் முறையாக கான்கிரீட் கலவை மூலம் அமைக்காமல் தரமற்றதாக பணி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் ஒரு மீட்டர் நீளத்திற்கு ரூ.10 ஆயிரம் வரை செலவிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இத்தகைய  பணிகள் தரமானதாக இல்லை   என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மாவட்ட நிர்வாகம் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். தரமானதாக பணிகள் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, டெண்டரில் கோரப்பட்டுள்ள முறையிலேயே பணிகள் நடப்பதாகவும், பணிகளில் தவறு ஏதும் இல்லை எனவும் தெரிவித்தனர்.

Tags : canal ,
× RELATED திடீர் தீ விபத்தில் 10 ஏக்கர்...