×

மாணவர்களின் இருப்பிடம் சென்று பாடங்கள் நடத்துவதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு

சிவகங்கை, டிச.31: சிவகங்கை மாவட்டத்தில் மாணவர்கள் வசிக்கும் இருப்பிடங்களுக்கு சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும் என்ற உத்தரவிற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் இறுதி முதல் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆன்லைன் மூலம் வகுப்பெடுத்தல், மாணவர்களுக்கு சத்துணவிற்கான பொருட்களை அவர்களிடம் வழங்குதல் மற்றும் அலுவலகப் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று அங்கு பாடம் நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இதுபோல் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பள்ளிகளை சுழற்சி முறையில் உடனடியாக திறக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொது செயலாளர் சங்கர் கூறியதாவது:மாணவர்கள் நகர்ப்பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவர்கள் படிக்கின்றனர். கொரோனா பரவலை தடுக்கவே பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதாக கூறப்படும் நிலையில் இதுபோல் மாணவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்துவது கொரோனா பரவலை தடுக்கவா செய்யும். மாணவர்கள் வசிக்கும் பகுதிகளில் எந்த இடத்தில் பாடம் நடத்துவது. அந்த இடங்களை யார் ஏற்பாடு செய்வது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒத்துழைப்பு கிடைப்பது, பாடம் நடந்துவதற்கு ஏற்ற சூழல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதனால் மன உளைச்சல்தான் ஏற்படும். இதற்கு பதில் பள்ளிகளை திறந்து பாதுகாப்பு வழி முறைகளை பின்பற்றி பாடம் நடத்துவதே சிறந்தது. மேலும் கிராமப் பகுதிகளுக்கு சென்று பெண் ஆசிரியைகள் பாடம் நடத்த வேண்டும் என வலியுறுத்துவதில் போக்குவரத்து மற்றும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. எனவே இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக திரும்ப பெற வேண்டும். சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Teachers ,location ,
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...