×

ராமேஸ்வரம், பரமக்குடி கோயில்களில் ஆருத்ரா தரிசனத்தில் நடராஜருக்கு அபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

ராமேஸ்வரம், டிச.31:  ராமேஸ்வரம் கோயில் ஆருத்ரா தரினத்தை முன்னிட்டு ேநற்றுளு மூன்றாம் பிரகாரம் ருத்ராட்ச மண்டபத்தில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் திருவாதிரை திருநாளான நேற்று அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜை நடந்தது. பின்னர் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதிகளில் கால பூஜைகள் நடைபெற்று மாணிக்கவாசகர் புறப்பாடு நடந்தன. 4 மணிக்கு கோயில் மூன்றாம் பிரகாரம் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள ருத்ராட்ச மண்டபத்தில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. 5 மணிக்கு மேல் மூன்றாம் பிரகாரம் நடராஜர் சன்னதி முன்பு இருந்த அனைத்து திரைகளும் விலக்கப்பட்டு 5.30 மணிக்கு நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தி தீபாராதனை செய்யப்பட்டது. ருத்ர தாண்டவ நடராஜர் ஆருத்ரா தரிசன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திரை விலக்கும் நிகழ்ச்சிக்கு முன்பு மூன்றாம் பிரகாரத்தில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்த நிலையில், அனைத்து பூஜைகளும் முடிந்து 6 மணிக்கு மேல் பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர்.

நீண்ட நாட்களுக்குப்பிறகு உள்ளூர் பக்தர்கள் அதிகளவில் கோயிலுக்கு வந்ததாலும், வெளியூர் பக்தர்களின் வருகையும் அதிகளவில் இருந்ததால் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவையான வசதிகளை கோயில் இணை கமிஷர் கல்யாணி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். ஆருத்ரா தரிசனத்தில் இரவு 8 மணிக்கு மேல் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல் நடந்தது. பரமக்குடி சந்திரசேகர சுவாமி ஈஸ்வரன் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதனையொட்டி மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுதலுடன் கடந்த 21ம் தேதி இரவு 7 மணிக்கு விழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை 3 மணிக்கு நடராஜர் சிவகாம சுந்தரிக்கு யாகசாலை அமைத்து சிறப்பு யாகம் நடைபெற்றது. காலை 4 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. இதனையடுத்து காலை 5 மணிக்கு ஆருத்ரா தரிசனம் மகா தீபாராதனை நடைபெற்றது. 9 மணிக்கு உற்சவர் மாணிக்கவாசகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு  நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

Tags : Devotees ,temples ,Natarajar ,Arutra Darshan ,Rameswaram ,Paramakudi ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ விழா