×

கந்தசஷ்டி விழா நிறைவு திருச்செந்தூர்-பழநி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

 

திருச்செந்தூர்: திருச்செந்தூர், பழநி முருகன் கோயில்களில் நேற்று நள்ளிரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மொய் எழுதி பிரசாதம் பெற்றுச் சென்றனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த அக்.22ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கி, நேற்று முன்தினம் (அக்.27) மாலை சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். நேற்று (அக்.28) திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, திருக்கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

காலை 6 மணிக்கு தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்பட்டு, தெற்குரதவீதி வழியாக தெப்பக்குளத் தெருவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு சேர்ந்தார். அங்கு அம்மனுக்கு ஏராளமான பெண் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். மாலையில் சுவாமி குமரவிடங்கப் பெருமான் மாப்பிள்ளை கோலத்தில் தனிச்சப்பரத்தில் எழுந்தருளி, புளியடித்தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்குரதவீதி வழியாக வந்து, தெப்பக்குளம் அருகே உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள தெய்வானை அம்பாளுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து தெற்குரதவீதி-மேலரதவீதி சந்திப்பில் வைத்து சுவாமி-அம்மன் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்து, பின்னர் சுவாமி அம்மன் திருக்கோயில் சேர்ந்தனர். நேற்று நள்ளிரவு திருக்கோயிலில் வைத்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் மொய் எழுதி, பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் அக். 22ல் கந்த சஷ்டி விழா காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாணம் நேற்று காலை 10.30 மணிக்கு மலைக்கோயிலில் நடந்தது. முன்னதாக வள்ளி – தெய்வானை சமேத சண்முகருக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமி மலர்களாலும், அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பின்னர் பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க மங்கல நாண் அணிவிக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலை மாற்றுதல், அப்பளம் உடைத்தல் போன்ற சடங்குகள் நடத்தப்பட்டது. இதைதொடர்ந்து நேற்றிரவு 7.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி – தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. கந்த சஷ்டி விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் திருமண விருந்தில் பங்கேற்று தங்களது விரதங்களை பூர்த்தி செய்தனர்.

 

Tags : Kanda Sashti festival ,Tiruchendur-Palani Murugan temple ,Tiruchendur ,Thirukalyanam ,Palani Murugan ,Moi ,Prasad ,Tiruchendur Subramania Swamy temple ,
× RELATED இறுதி சடங்கு செலவுக்கு பணம்...