கல்லூரி மாணவி மாயம்

மதுரை கீழ அண்ணாத்தோப்பைச் சேர்ந்தவர் சந்தனகருப்பன். இவரது மகள்  யோகலெட்சுமி(19). இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில்  பி.காம்(சி.ஏ) 3ம் ஆண்டு படித்துவந்தார். கடந்த 28ம் தேதி,  வீட்டிலிருந்து ெவளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள்  மற்றும் தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தும் மாணவியை பற்றி எந்த தகவலும்  கிடைக்கவில்லை. இதனையடுத்து, மாணவியின் தாயார் ராஜலெட்சுமி புகாரில் திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து  வருகின்றனர்.      

    

மோசடி புகாரில் 3 பேர் மீது வழக்கு

மதுரை கோசாகுளம் மாரியம்மன் கோயில் 1வது தெருவைச் சேரந்தவர் நாகராணி(56). இவர், திருச்சி மாவட்டம் நாவல்பட்டு அண்ணாநகரை சேரந்த, உறவினர், ராமச்சந்திரன், இவரது மகன் மதன் ஆகியோரிடமிருந்து காலி இடத்தை, கடந்த மே மாதம் ரூ.8 லட்சத்திற்கு விலைக்கு வாங்கினார். ஆனால், பணத்தை பெற்றுக்கொண்டு, இடத்தை பதிவு செய்து தராமல் தாமதம் ெசய்துவந்தார். இதனையடுத்து, ராமச்சந்திரன், மதன் மற்றும் சாந்திலதா ஆகியோர் மீது நாகராணி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், மோசடி வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில், புதூர் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை நகரில் கஞ்சா வளர்ப்பு

மதுரை வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய காலனி பகுதியில் உள்ள காலி இடத்தில் சிலர், கஞ்சா பயிரிட்டு வளர்த்து வருவதாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷூக்கு தகவல் கிடைத்தது. இவர் கொடுத்த புகாரின் பேரில், அவனியாபுரம் போலீசார், குறிப்பிட்ட பகுதியில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டுவசதி வாரிய காலனியில் உள்ள 8 சென்ட் இடத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருப்பது தெரியவந்தது. போலீசார் கஞ்சா செடிகளை அழித்தனர். அவற்றை பயிரிட்டவர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மூதாட்டி மாயம்

சிவகங்கை மாவட்டம் கீழப்பசலை கிராமத்தை சேர்ந்த நாகன் மனைவி காளம்மா(62). இவர் தனது மருமகள் இந்திராவுடன் டிச.29ம் தேதி மதுரை வந்தார். உறவினர் ஒருவரை பார்த்துவிட்டு, இருவரும் கீழப்பசலை  செல்வதற்காக, மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பஸ்நிலையம் வந்தனர். அப்ேபாது, காளம்மா பாத்ரூம் செல்வதாக கூறிச்சென்றவர், வெகு நேரமாகியும் திரும்பவில்லை. பஸ் நிலையம் முழுவதும் தேடிப்பார்த்துவிட்டு, இந்திரா, பஸ் நிலைய புறக்காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.  அவர் கொடுத்த புகாரின் பேரில், அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மணல் அள்ளிய 7 பேர் கைது

பாலமேடு அருகே உள்ள வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, சேந்தமங்கலம், இடையபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முறையான அனுமதி பெறாமல் விவசாய நிலங்களில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேில் சிறப்பு காவல் துறையினர் ரோந்து சென்றனர். அப்போது வெள்ளையம்பட்டி அருகே உள்ள சரந்தாங்கி பகுதியில் முறைகேடாக செம்மண் குவாரி அமைத்து மண் அள்ளப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடத்தில் செம்மண் கிராவல் அள்ளிய டிப்பர் லாரிகள் கைப்பற்றப்பட்டு பாலமேடு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் லாரி டிரைவர் மாணிக்கம் உள்ளிட்ட 7 பேர்மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் கனிமவள அனுமதி சீட்டை முறை கேடாக பயன்படுத்தி மோசடியாக மண் விற்பனை செய்ததாக மீராஹீசைன், மேலாளர் விக்னேஷ் மீது பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டூவீலர் திருட்டு

மேலூர் அருகே உள்ள உறங்கான்பட்டியை சேர்ந்தவர் ஆன்ந்த்(34). இவருக்கு சொந்தமான டூவீலரை அவரது சித்தப்பா சபாபதி வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். நேற்று அங்கு சென்று பார்த்த போது டூவீலரை காணவில்லை. இது குறித்து கீழவளவு போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

கஞ்சா விற்ற 5 பேர் கைது

மதுரை கூடல்புதூர் போலீஸ் எஸ்.ஐ. செந்தில்குமார் மற்றும் போலீசார் ரயிலார் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கூடல்நகர் ரயில்வே பாலம் அருகே அங்கு கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்றுக்கொண்டிருந்த, ஆரப்பாளையம் கண்மாய்கரை பகுதியை சேர்ந்த மீனா(58), எம்.கே.புரத்தை சேர்ந்த விஜய்(23) மற்றும் நந்தகுமார்(27) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து, ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் ரொக்கம் 300 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதேபோல், சிம்மக்கல் வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம் பகுதியில் ரோந்து சென்ற, எஸ்.ஐ. பாண்டியராஜன் தலைமையிலான திலகர்திடல் போலீசார், அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த, பேச்சியம்மன் படித்துரையை சேர்ந்த மீனாட்சி சுந்தரம்(20)என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.  மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட் அருகே கஞ்சா பொட்டலங்களுடன் திரிந்த, வண்டியூரை சேரந்த அருண் பிரகாஷ்(22) என்பவரை, அண்ணாநகர் போலீஸ் எஸ்.ஐ. ரீகன் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஓடும் பஸ்சில் முதியவர் மரணம்

கூத்தியார்குண்டு அருகே உள்ள கருவேலம்பட்டியை சேர்ந்தவர் முத்துக்காளை(60). இவர் மகன் வேலை விஷயமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க நேற்று முன்தினம் வந்தார். மாலையில் வீடு செல்ல, அண்ணா பஸ் நிலையத்திலிருந்து, விளாச்சேரி செல்லும் பஸ்சில் ஏறினார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, சிறுநீர் போன நிலையில் மயங்கி சாய்ந்தார். இதை கவனித்த பஸ் டிரைவர், அரசு மருத்துவமனை முன் பஸ்சை நிறுத்தி, அவரை, அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டுசென்றனர். முத்துக்காளையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மகன் முத்துச்செல்வகுமார் கொடுத்த புகாரில், மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>