பரவை சத்தியமூர்த்தி நகரில் ரூ.60 லட்சத்தில் புதிய சாலை

வாடிப்பட்டி, டிச. 31: மதுரை பரவை பேரூராட்சிக்குட்பட்டது சத்தியமூர்த்திநகர். சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் அமைந்துள்ளது. அமைச்சர் செல்லூர் ராஜூவின் சொந்தத் தொகுதியான இப்பகுதிக்கு மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலையிலிருந்து செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்களும், ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் கார்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டி நிதியிலிருந்து பரவை பேரூராட்சி மூலம் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சத்தியமூர்த்தி நகருக்கு புதிய சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விழாவிற்கு தலைமை வகித்து பூமி பூஜையை நடத்தி பணியை துவக்கி வைத்தார். மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன், பரவை பேரூராட்சி முன்னாள் சேர்மன் ராஜா, செயல் அலுவலர் சுந்தரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

Related Stories: