×

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும்

நாமக்கல், டிச.31: ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை ஆன்லைன் மூலம் உடனடியாக நடத்த வேண்டும் என முதல்வரிடம் முதுகலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், மாணிக்கம்பாளையத்துக்கு நேற்று முன்தினம் வருகை தந்த, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் ராமு மற்றும் நிர்வாகிகள் சந்தித்து  கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருத்தப்பட்ட பணிமூப்பு பட்டியலை பள்ளி கல்வித்துறை உடனடியாக வெளியிட வேண்டும்.

அரசு பள்ளிகளில் போட்டி தேர்வு மூலம் பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களின் வயதை இட ஒதுக்கீடு இல்லாதவர்களுக்கு 40 வயது எனவும், இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு 45 வயது எனவும் நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட அரசாணையை அரசு திரும்பபெற வேண்டும். 2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் மற்றும் துறைரீதியான நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும். நடப்பு கல்வியாண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை இணைய வழியில் நடத்த வேண்டும்.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்தி, அதில் 2.5 சதவீதத்தை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : teacher ,
× RELATED கல்லூரி மாணவர்களின் வாக்காளர்...