×

மாவட்டத்தில் தடையை மீறி ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்தால் குற்றவியல் நடவடிக்கை

கிருஷ்ணகிரி, டிச.31: கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளது. சராசரியாக 8 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய இம்மீன்கள், நமது பாரம்பரிய நன்னீர் மீன் இனங்களையும், அதன் முட்டைகளையும் உணவாக்கி கொள்வதால் பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த மீன்களை பண்ணைக் குட்டைகளிலோ, மீன்வளர்ப்பு குளங்களிலோ இருப்பு செய்து வளர்த்தால், மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காலங்களில் குளங்களிலிருந்து தப்பித்துவிட வாய்ப்புள்ளது. தப்பி செல்லும் இம்மீன்கள் ஏரி மற்றும் ஆறுகளில் சென்று பிற மீன் இனங்களை அழிப்பதால், ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை தவிர, வேறு எந்த மீன்களும் பிழைக்க வாய்ப்பில்லாத நிலை உருவாகும்.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க வேண்டாம். ஏற்கனவே, மீன் பண்ணைகளில் இவ்வின மீன்களை வளர்த்து வரும் மீன்வளர்ப்போர், அதனை அழித்துவிட வேண்டும். ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்கும் பண்ணைகள் கண்டறியப்பட்டால், மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம், 4வது கிராஸ், கோஆப்ரேட்டிவ் காலனி, கிருஷ்ணகிரி என்ற முகவரியிலோ அல்லது 04343-235745 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தடையை மீறி வளர்த்தால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : African ,
× RELATED 15 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற மாஜி...