போலீசாரை தாக்கிவிட்டு நிர்வாணமாக ஓடிய சைக்கோ வாலிபர் ஆரணியில் நள்ளிரவில் பரபரப்பு

ஆரணி, டிச.31: ஆரணியில் நள்ளிரவில் போலீசாரை தாக்கிவிட்டு நிர்வாணமாக ஓடிய சைக்கோ வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி புதிய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு மொபட் ஒன்று நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. நள்ளிரவு 12.15 மணியளவில் அங்கு வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், அந்த மொபட்டை தள்ளிக்கொண்டு சென்றார். இதனை கவனித்த போலீசார் அவரிடம் விசாரிக்க தடுத்து நிறுத்தினர்.

ஆனால் அவர், மொபட்டை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது, அந்த நபர் போலீசாரின் கைகளை கடித்ததுடன் சரமாரியாக தாக்கினார். பின்னர், திடீெரன தனது ஆடைகளை அவிழ்த்து, அங்கேயே வீசிவிட்டு நிர்வாணமாக ஓட ஆரம்பித்தார். போலீசாரும் அவரை விரட்டினர்.

பழைய பஸ் நிலையம் அருகே மடக்கி பிடிக்க முயன்றபோது, அங்கிருந்த காலி மதுபாட்டில்களை உடைத்து போலீசாரை தாக்க பாய்ந்தார். மேலும், ‘அருகே வந்தால் குத்திவிடுவேன்’ என கூச்சலிட்டார். அப்போது, அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் ஒன்று சேர்ந்து அந்த நபரை மடக்கி பிடித்தனர். ஆத்திரம் அடைந்த அவர், ஆட்டோ டிரைவர் ஒருவரை பாட்டிலால் குத்தினார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் அந்த நபரை பிடித்து சரமாரி தாக்கினர். இருப்பினும், அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். அவர் மொபட் திருடனா? அல்லது சைக்கோ வாலிபரா? என்பது தெரியவில்லை. அவரை போலீசார் தொடர்ந்து ேதடிவருகின்றனர். இதற்கிடையில் பறிமுதல் செய்யப்பட்ட அந்த மொபட் யாருடையது? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் ஆரணியில் நள்ளிரவு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>