×

ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்: 9 மாதங்களுக்கு பிறகு மாடவீதியில் சுவாமி பவனி * ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை, டிச.31: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடந்தது. அதையொட்டி, சிவகாம சுந்தரி சமேத நடராஜர் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று, சிவாலயங்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்புமிக்கது. அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற ஆருத்ரா தரிசனம் நேற்று நடைபெற்றது. அதையொட்டி, அலங்கார ரூபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர், அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, நேற்று அதிகாலை 4 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர், காலை 9 மணி அளவில் விசேஷ பூஜைகள் நடைபெற்றது. அப்போது, கடந்த மாதம் 29ம் தேதி மலை மீது காட்சியளித்த மகாதீப கொப்பரையில் இருந்த பெறப்பட்ட தீபச்சுடர் பிரசாதம் (தீப மை), நடராஜருக்கு அணிவிக்கப்பட்டது. பின்னர், கோயில் 5ம் பிரகாரத்தில் இருந்து அலங்கார ரூபத்தில் புறப்பட்டு திருமஞ்சன கோபுரம் வழியாக சிவகாம சுந்தரி சமேத நடராஜர் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, மாணிக்கவாசக பெருமானும் மாடவீதியில் உடன் வலம் வந்தார்.

அண்ணாமலையார் கோயிலில் வழக்கமாக உற்சவ மூர்த்திகள் வீதியுலா புறப்பாடு எப்போதும் ராஜகோபுரம் அடுத்துள்ள திட்டிவாசல் வழியாக நடைபெறுவதே வழக்கம். ஆனால், நடராஜர் வீதியுலா புறப்பாடு மட்டும் திட்டிவாசல் வழியாக நடைபெறுவதில்லை. திருமஞ்சன கோபுரம் வழியாக புறப்பட்டு நடராஜர் வீதியுலா செல்வது தனிச்சிறப்பாகும். இந்நிலையில், கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல், அனைத்து விழாக்களும், கோயில் உட்பிரகாரங்களில் மட்டுமே நடந்தது. தீபத்திருவிழா 10 நாள் உற்சவம், தேரோட்டம் உள்ளிட்ட எந்த நிகழ்வுகளும் மாடவீதியில் நடைபெறவில்லை.

இந்நிலையில், மாடவீதியில் சுவாமி திருவீதியுலா நடத்த விதிக்கப்பட்ட தடை கடந்த 9 மாதங்களுக்கு பிறகு மாவட்ட நிர்வாகம் நீக்கியது. அதையொட்டி, சிவகாம சுந்தரி சமேத நடராஜர், மாடவீதியில் பவனி வந்தனர். அப்போது, ஏராளமான பக்தர்கள் மாடவீதியில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல், கோயில் 5ம் பிரகாரத்தில் சுவாமி எழுந்தருளிய காட்சியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டனர். போலீஸ் கட்டுப்பாடுகளையும் மீறி பக்தர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பக்தர்களை அனுமதிக்க போலீஸ் மறுத்ததால், திருமஞ்சன கோபுர நுழைவு வாயிலில் போலீசாருடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags : darshan ,devotees ,Swami Bhavani ,corridor ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 6 மணி...