செய்யாறில் பிறந்து 15 நாட்களில் பச்சிளம் பெண் குழந்தை அரசு காப்பகத்தில் ஒப்படைப்பு

செய்யாறு, டிச.31: செய்யாறு அரசு மருத்துவமனையில் பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

செய்யாறு பகுதியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. 10ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் 60 வயது முதியவர். இவர், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து, மாணவிக்கு கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், மாணவியை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

அதன் காரணமாக மாணவி கர்ப்பமானார். இதுகுறித்த புகாரின்பேரில் செய்யாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து மாணவியை பலாத்காரம் செய்த முதியவரை போக்சா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு செய்யாறு அரசு மருத்துவமனையில் கடந்த 16ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை வளர்க்க முடியாத காரணத்தாலும், மாணவி மேற்கொண்டு படிக்க விரும்பியதாலும், அந்த குழந்தையை அரசு காப்பகத்தில் ஒப்படைக்க விருப்பம் தெரிவித்தார்.

அதன்பேரில், செய்யாறு அரசு மருத்துவமனை குழந்தை மருத்துவர் பாலாஜி முன்னிலையில், மருத்துவ அலுவலர் கேப்டன் கே.எம்.ஏழுமலை, அந்த பச்சிளம் பெண் குழந்தையை திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவை சேர்ந்த பாதுகாப்பு அலுவலர் சி.சகாய இம்மானுவேலிடம் நேற்று ஒப்படைத்தார்.

Related Stories:

>