சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

வேலூர், டிச.31: வேலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் நடந்த சிவகாமி அம்மை சமேத நடராஜ பெருமானின் மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வான மண்டலத்தில் சுற்றி வரும் 27 நட்சத்திர கூட்டங்களில் ஓணம், ஆதிரை ஆகிய 2 நட்சத்திரங்களுக்கு மட்டுமே திரு என்ற அடைமொழி சேர்கிறது. திருவோணம், திருவாதிரை என்ற இந்த நட்சத்திரங்களில் திருவோணம் விஷ்ணுவுக்கும், திருவாதிரை சிவபெருமானுக்கும் உரியவை. பஞ்சபூத சக்தியான சிவம் தன்னை நெருப்புக்கோளமாக காட்டிய நாள் திருவாதிரை நட்சத்திர திருநாள்.

கர்மாவே பெரிது, கடவுள் இல்லை என்று கூறி நின்ற முனிவர்களின் அறியாமையை போக்கவும் அவர்கள் தனக்கு எதிராக அனுப்பிய யானையை அடக்கி அதன் தோலை ஆடையாக அணிந்து உலகின் இயக்கம் நானே என்று காட்டி திருநடனம் புரிந்து காட்சி தந்தருளிய நாள் மார்கழி திருவாதிரை திருநாள். அதேபோல் வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் ஈசனின் திருநடனம், ஆருத்ரா கண்டு களித்த நாளும் திருவாதிரை திருநாளே.

இத்தகைய சிறப்புமிக்க நாளான மார்கழி திருவாதிரை நாளான நேற்று வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிவகாமியம்மை சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மாணிக்கவாசக பெருமானுடன் சிவகாமியம்மை நடராஜ பெருமான் பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சியை தந்தருளினார். அதேபோல் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் நேற்று அதிகாலை நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு நடராஜ பெருமான் ஆருத்ரா தரிசன காட்சியை தந்தருளினார்.

மேலும் திருவலம் வில்வநாதீஸ்வர், காங்கேயநல்லூர் காங்கீசர், காட்பாடி காந்தி நகர் சந்திரமவுலீஸ்வரர், பேரிபேட்டை சிவசுப்பிரமணியசுவாமி, கொசப்பேட்டை சுந்தரேஸ்வர சுவாமி, மேல்மொணவூர் கைலாசநாதர், பள்ளிகொண்டா நாகநாதீஸ்ரர், குடியாத்தம் கருப்புலீஸ்வரர், அரியூர் ஜோதீஸ்வரர், மூஞ்சூர்பட்டு நாகநாதீஸ்வரர் என அனைத்து சிவன் கோயில்களிலும் ஆருத்ரா சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

குடியாத்தம்: குடியாத்தம், நெல்லூர்பேட்டையில் உள்ள கருப்புலிஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி உற்சவர்களான நடராஜர், சிவகாமிசுந்தரி, பாலசார் தூலிஸ்வரர் ஆகியோருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர். திருவலம்: திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று அதிகாலை சிவகாமி சமேத நடராஜ பெருமான், உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு கோயில் நான்கு மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Related Stories:

>