×

வ.உ.சி. பூங்காவில் இறுதி கட்ட பணிகள் தீவிரம்

ஈரோடு, டிச.31: ஈரோடு வ.உ.சி. வளாகத்தில் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சிறுவர் பூங்காவில் ரூ.6.42கோடியில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால், வரும் ஜன.10ம் தேதிக்குள் திறப்பு விழா நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்தார். ஈரோடு மாநகரில் வ.உ.சி. பூங்கா 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த காலங்களில் பொழுது போக்கு பூங்காவில் மான், மயில், புலி, சிறுவர் ரயில், அறிவியல் பூங்கா, தாமரைக்குளம், புல்வெளி, வானுயர்ந்த மரங்கள் பறவைகள் உள்ளிட்ட வன விலங்குகள் சரணாலயம் போல் கூடங்கள் இருந்தன.

இதனால், ஈரோடு மாநகர மக்களுக்கு இது பூங்கா பொழுதுபோக்கு அம்சமாக விளங்கியது. தினமும்  ஏராளமான பொதுமக்கள் பூங்காவை கண்டு களித்து சென்றனர். அப்போது இருந்த நகராட்சி அதிகாரிகள், பணியாளர்களின் அலட்சியத்தால், முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் புள்ளி மான்கள் ஒவ்வொன்றாக இறந்தன. உணவு தீனி இல்லாமல் தவித்த அரிய வகை விலங்குகளான, புலி, கடமான் போன்றவை மீட்கப்பட்டு சென்னை வண்டலுார் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பப்பட்டது.

சிறுவர் ரயில் நிறுத்தப்பட்டதாலும், செயற்கை நீரூற்று பயன்பாடு இல்லாமல் போனது. பொழுது போக்கு பூங்கா அருகில் அமைந்திருந்த சிறுவர் பூங்காவில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி குட்டை போல் காணப்பட்டது. மேலும், பூங்காவில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் உடைந்து பழுதானது. இதனால், பொழுது போக்கு மற்றும் சிறுவர் பூங்காவில் எவ்வித வசதிகளும் இல்லாததால் பொதுமக்களின் வருகை அடியோடு நின்றது. இதனால், இந்த இரண்டு பூங்காக்களும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. ஈரோடு மாநகர் பல்வேறு வளர்ச்சியடைந்தும், மக்களுக்கு எவ்வித பொழுது போக்கு தளமும் இல்லாததால், ஈரோடு மாநகர மக்கள் வ.உ.சி. பொழுதுபோக்கு பூங்கா, சிறுவர் பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற மாநகராட்சி நிர்வாகம், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வ.உ.சி. பொழுதுபோக்கு பூங்கா, சிறுவர் பூங்காவை மேம்படுத்த ரூ.6.42கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி, சிறுவர் பூங்காவில் புதிய செயற்கை நீரூற்று, சிறுவர்களுக்கான ரயில், புட்கோர்ட், மூலிகை செடிகள், அழகிய மலர் தோட்டங்கள், நடைபாதைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் போன்றவை அமைக்கப்பட்டு இறுதி கட்ட பணி நடந்து வருகிறது. இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது: வ.உ.சி. பொழுது போக்கு மற்றும் சிறுவர் பூங்காவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. சிறுவர் பூங்காக்களில் விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டு, அங்கு மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், கண் பார்வையற்றவர்கள் அவர்களாகவே நடந்து செல்லும் வகையில் அவர்களுக்கென தனி பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, சாலைப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்து வரும் ஜன.10ம் தேதிக்குள் திறப்பு விழா செய்யப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : phase ,park ,
× RELATED 2ம் கட்ட தேர்தல் 89 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம்