×

ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் பேக்கிங் செய்யும் பணி தீவிரம்

ஈரோடு, டிச.31: ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் அரசின் பொங்கல் பொருட்கள் வழங்க எடை போட்டு பேக்கிங் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பில் ரேஷன்கார்டு தாரர்களுக்கு பொங்கல் வைக்க தேவையான பொருட்கள், ரொக்க பணமும் வழங்கப்பட்டுகிறது. அதன்படி, நடப்பாண்டும் பொங்கல் பண்டிகைக்கு அரிசி ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பொருட்களாக அரிசி, சர்க்கரை, நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரூ.2,500 ரொக்கமும் வழங்கப்பட உள்ளது.

இதற்காக, பொங்கல் பொருட்கள் அடங்கிய பை, ரொக்கம் பெறுவதற்கான டோக்கன் கடந்த 26ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு பெருந்துறை ரோடு டீச்சர்ஸ் காலனி அருகே உள்ள மாவட்ட மொத்த கூட்டுறவு விற்பனை பண்டக சாலையில் (சிந்தாமணி) நேற்று முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காயை பேக்கிங் செய்யும் பணி துவங்கியது. இதில், முந்திரி, திராட்சை தலா 20 கிராம், ஏலக்காய் 5 கிராமாக எடை போட்டு தனித்தனியாக பேக்கிங் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியில் 10க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு பேக்கிங் செய்யப்படும் பொங்கல் பொருட்கள் சிந்தாமணிக்கு உட்பட்ட 25 ரேஷன் கடைகளில் உள்ள 75 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும். இதேபோல், பிற கூட்டுறவு சங்கங்களிலும் பொங்கல் பொருட்கள் எடை போட்டு  பேக்கிங் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Tags : Pongal ,district ,Erode ,
× RELATED ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலர்கள் தபால் வாக்குப்பதிவு..!!