×

நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் விவசாயிகள் புகார்

ஈரோடு, டிச. 31: ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கான குறைகேட்பு கூட்டம் ஆன்லைன் மூலம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் பேசியதாவது: கரும்பு விவசாயிகளின் நிலுவைத்தொகை ரூ.17 கோடியை ஆலை நிர்வாகத்திடமிருந்து பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காலிங்கராயன் வாய்க்கால் பராமரிப்பு பணிக்காக ரூ.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை விவசாயிகள் சார்பில் வரவேற்கிறோம். ஆனால் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மதகுகளை இடிக்காமல், பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய வங்கிகளில் நகைக்கடனுக்கு 4 சதவீதம் வட்டியில் கடன் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இது 8 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை காப்பீடு தொகை கிடைக்கவில்லை. மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளதையடுத்து நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

இதில் வெளிநபர்கள் மற்றும் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. கீழ்பவானி வாய்க்கால் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு வருகிறது. எனவே காங்கிரீட் தளம் அமைக்கக்கூடாது. கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்கி வருவதால், இதை தடுக்க கால்நடைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலவரி வசூல் செய்யப்பட்டதற்காக சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு கிராம நிர்வாக அதிகாரிகள் உரிய ரசீது வழங்க வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் கடைமடை வரை தண்ணீர் சென்று சேராமல் உள்ளதால், காங்கிரீட் தளம் அமைப்பதுதான் இதற்கு தீர்வாகும்.

இது தொடர்பாக விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மஞ்சள் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மேலும் குவிண்டால் மஞ்சள் ரூ.10 ஆயிரத்திற்கு அரசு கொள்முதல் செய்ய வேண்டும். கீழ்பவானி கொப்பு வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும். பால் கொள்முதல் நிலையங்களில் வாரந்தோறும் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். 100 நாள் திட்டத்தினை தேர்தல் முடியும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். பயிர்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பர்கூர், கடம்பூர், தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடியின மக்களின் நிலங்கள் வெளிநபர்களுக்கு பட்டா மாறுதல் செய்வதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும்.

அந்தியூர் பெரியஏரியில் இருந்து சந்திபாளையம் ஏரிக்கு செல்லும் நீர்வழித்தடங்கள் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை வருவாய்துறையினர் அகற்ற வேண்டும். மலைக்கிராமங்களில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. காலிங்கராயனில் நிலுவை பயிர்களை காப்பாற்ற வருகின்ற மார்ச் 20ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தரப்பில் பேசினர்.

Tags : paddy procurement centers ,
× RELATED லத்தூர் ஒன்றியத்தில் 3 அரசு நேரடி நெல்...