×

இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி

சென்னை: இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தீவுத்திடலில், தன்னார்வ அமைப்பு மற்றும் ரோட்டரி சார்பில் 16வது ஆண்டு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

‘‘ஒரு நடை ஒரு நம்பிக்கை” என்ற பெயரில் நடைபெற்ற இந்த நடைபயணத்தில், நடிகை சஞ்சிதா செட்டி, புற்றுநோயில் இருந்து உயிர் பிழைத்தவர்கள், மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தியவாறு பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேடையில் பேசியதாவது: சில பேர் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே நடந்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் தினம்தோறும் நடப்பவர்களுக்கும் ஓடுபவர்களுக்கும் புற்றுநோய் வருவதில்லை என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கிறது. புற்று நோய்களை தடுப்பதற்காக நடைப்பயிற்சி உள்ளிட்டவைகளை மேற்கொண்டால் புற்றுநோய் வராது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கால் நூற்றாண்டுக்குப் பிறகு உலகில் சில இடங்களில் போலியோ தலைத் தூக்கி உள்ளது. தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் போலியோ பாதிப்பு வந்திடுமோ என்று ஒரு அறிவுறுத்தல்கள் வந்துள்ளது, அந்த ஆறு மாவட்டங்களில் போலியோ தடுப்பு மருந்துகளை போட்டு வருகிறோம்.

புற்றுநோய் தடுப்பூசி திட்டத்திற்காக 38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, டெண்டர் முடிந்தவுடன் இந்தியாவில் எங்கும் இல்லாமல் 1 முதல் 14 வயதுடைய (பெண்கள்) புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது. விரைவில் அந்த பணிகள் தொடங்க உள்ளது.தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை தொடங்கினால் பிறகு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தும் திட்டம் ஏற்படும். இந்தியாவில் 1 லட்சம் பேரில் 28 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களுக்கு இது உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : India ,Tamil Nadu ,Chennai ,Public Health Minister ,M. Subramanian ,Rotary ,
× RELATED சென்னையில் குடியிருப்புகள் மற்றும்...