×

ஆஸ்திரேலிய வீராங்கனைகளிடம் சில்மிஷம்; மத்திய பிரதேச பாஜக எம்எல்ஏ மத ரீதியாக பேசியதால் சர்ச்சை: அரசியல் வட்டாரத்தில் கண்டனம்

போபால்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட நபரின் மதத்தைக் குறிப்பிட்டு, பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 23ம் தேதி, ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகளிடம் மர்ம நபர் ஒருவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்தூரை சேர்ந்த அகில் கான் என்பவரை உடனடியாகக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த நிலையில், மத்தியப் பிரதேச பாஜக எம்எல்ஏ ராமேஷ்வர் சர்மா, இந்தச் சம்பவம் குறித்து மதரீதியான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘அகில் கான் போன்றவர்கள் இந்திய கலாசாரத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் சட்டவிரோதக் குழந்தைகள் ஆவர். இது இந்திய கலாசாரத்திற்கு களங்கம் விளைவிக்கும் சதிச் செயல். இத்தகைய செயல்கள் குறிப்பிட்ட மதத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகின்றன. பெண் என்பவர் இந்துவாக இருந்தாலும் சரி, இஸ்லாமியராக இருந்தாலும் சரி… இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரது பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்’ என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் குறித்து எம்எல்ஏ ஒருவர் கைது செய்யப்பட்டவரின் மதம் மற்றும் மதத்துடன் ஒப்பிட்டு பேசியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

Tags : Madhya Pradesh ,BJP MLA ,Bhopal ,ICC ,WOMEN'S WORLD CUP ,INDORE, MADHYA PRADESH STATE ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...