×

திருவாரூர் மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்

திருவாரூர், டிச.30: திருவாரூர் மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளை உடனே செப்பனிட வேண்டும் என நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. திருவாரூர் மாவட்ட நுகர்வோர் அமைப்பின் மாதாந்திர கூட்டம் தலைவர் அண்ணாதுரை தலைமையிலும், பொதுச் செயலாளர் ரமேஷ் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் பொறுப்பாளர்கள் அருள், பேராசிரியர் பாஸ்கரன், செல்வக்குமார், குமாரசாமி, மஞ்சுளா உட்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசு மூலம் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும் சட்டத்தில் வழிவகை இருந்தாலும் இந்த சட்டங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் இருப்பதால் விவசாயிகளுக்கு உரிய ஆதார விலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பலன் கிடைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்வது, கொரோனா காலத்திற்கு பின் தற்போது தெற்கு ரயில்வே மூலம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், திருவாரூர் பகுதியில் இருந்து காரைக்குடி செல்லும் ரயில், மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில் மற்றும் காரைக்காலில் இருந்து திருவாரூர் வழியாக பெங்களூர் செல்லும் விரைவு ரயில் உட்பட அனைத்து ரயில்களையும் இயக்குவதற்கு தென்னக ரயில்வேயை கேட்டுக்கொள்வது, மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு விரைந்து வழங்கிட வேண்டும் மற்றும் மழை காரணமாக தஞ்சை நாகை தேசிய நெடுஞ்சாலை உட்பட மாவட்டம் முழுவதும் அனைத்து சாலைகளும் சேதமடைந்து உள்ளதால் இதனை உடனே செப்பனிட மத்திய மாநில அரசுகளை கேட்டுக் கொள்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : roads ,Thiruvarur district ,
× RELATED முத்துப்பேட்டை அருகே...