உலகிலேயே அதிகம் பொய் பேசியதை மோடியின் கின்னஸ் சாதனையாக பாராட்டலாம்

தஞ்சை, டிச. 30: தஞ்சையில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி மாநில அளவிலான பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் வரவேற்றார். கூட்டத்தில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சென்னையில் தொடர் போராட்டம் நடத்துவது, இடம் தேதி பின்னர் அறிவிப்பது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் சண்முகம் பேசியதாவது: தஞ்சை இந்த பொதுக்கூட்டத்தை நடத்த விடாமல் ஆளுங்கட்சியினர் கடந்த 3 நாட்களாக சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட்டனர். ஆனால் அதையும் மீறி ஆயிரக்கணக்கான விவசாயிகள் இங்கு உணர்வு பூர்வமாக பங்கேற்றனர். ஆளுங்கட்சியினர் சென்னையில் தேர்தல் பிரசாரத்தை நடத்துகின்றனர். அங்கு கொரோனா தொற்று வராதா, விவசாயிகள் பொதுக்கூட்டம் நடத்தினால் மட்டும் வந்து விடுமா. ஆளுங்கட்சியினர் வேளாண் சட்டங்களை ஆதரித்து கூட்டங்களை நடத்துவதுபோல் அதை எதிர்த்து கூட்டங்கள் நடத்த எங்களுக்கும் உரிமை இருக்கிறது. இது அரசியல் சாசனம் கொடுத்துள்ள உரிமை.

டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி விவசாயிகள் சந்தித்து பேசாமல் டிவி, ரேடியோவில் பேசி வருகிறார். மோடி அதிமாக பொய் பேசி வருகிறார்.  லகிலேயே அதிகம் பொய் பேசியதற்கு மோடிக்கு கின்னஸ் சாதனையாக பாராட்டலாம். மத்திய அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளதால் வருங்காலத்தில் உணவுக்கு நாம் கையேந்தும் நிலை ஏற்படும். எனவே தான் இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்கிறோம்.

இந்த சட்டங்களால் 22 லட்சம் விவசாயிகளின் இலவச மின்சாரம் பறிபோகும் நிலை ஏற்படும். டெல்லியில் போராட்டத்தை சுமூகமாக முடிக்க மத்திய அரசு முன்வர வேண்டும். நாட்டிலேயே இதுபோன்ற ஒரு போராட்டம் நடந்ததில்லை, இனியும் நடக்கப்போவதில்லை. எனவே மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில் எம்பிக்கள் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், செல்வராஜ், எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் மற்றும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.

Related Stories:

>