×

‘தனக்கு தகுதி இல்லை என்று ஒருவர் சொல்லி விட்டார்’; அன்புமணிக்கு பதிலாக மகளுக்கு பாமக செயல் தலைவர் பதவி: தர்மபுரி பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் அதிரடி

தர்மபுரி: தர்மபுரியில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில், தனது மகள் காந்தியை, கட்சியின் செயல் தலைவராக ராமதாஸ் அறிவித்தார். விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நடந்த பாமக பொதுக்குழுவின்போது பாமக இளைஞர் சங்க தலைவராக தனது மூத்த மகள் காந்தியின் மகன் முகுந்தனை ராமதாஸ் அறிவித்தார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அன்பமணி மைக்கை தூக்கிப்போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமதாஸ், இது என்னோட கட்சி, நான் சொல்வதை கேட்பவர்கள் இங்கே இருக்கலாம், பிடிக்காதவர்கள் வெளியேறி விடலாம் என மேடையிலேயே பகிரங்கமாக அறிவித்தார். உடனே அன்புமணி பனையூரில் தனி அலுவலகம் தொடங்குகிறேன், அங்கு வந்து என்னை பாருங்கள் என்று கூற தந்தை-மகன் இடையே மோதல் வெடித்தது. அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், நிர்வாகிகளை ராமதாஸ் அறிவித்தார். ஆனால் அவர்கள் பொறுப்பில் தொடர்வார்கள் என்று அன்புமணி பதிலடி கொடுத்தார். அதை தொடர்ந்து, அன்புமணியிடம் இருந்த பாமக தலைவர் பதவியை பறித்த ராமதாஸ், அவரை செயல் தலைவராக அறிவித்து, இனி நானே தலைவராக இருப்பேன் என்றார். ஆனால், இதனை ஏற்காத அன்புமணி கட்சி தலைவர் என்ற பெயரிலேயே அறிக்கைகளை விட்ட வண்ணம் இருந்தார்.

இந்த சூழலில், தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில் அவரது ஷோபாவுக்கு அடியில் ஒட்டு கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அன்புமணிதான் வைத்து தன்னை வேவு பார்த்ததாக ராமதாஸ் குற்றம்சாட்டினார். இருவருக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுவடைந்ததால், தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டி ஆதரவு திரட்டி பாமக தங்களுக்கே சொந்தம் என தீர்மானம் நிறைவேற்றினர். இதையடுத்து, பாமக மற்றும் மாம்பழம் சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் இருதரப்பு முறையிட்டது. மேலும், தமிழக சட்டசபையில் பாமக தலைவராக உள்ள ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ ஜி.கே.மணியை நீக்கக்கோரி, அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், பாமக இரு அணிகளாக உடைந்தது.

இதையடுத்து, தன்னுடைய இனிஷியலை மட்டும் அன்புமணி பயன்படுத்தலாம் என்றும், வேறு எந்த உரிமையும் அவருக்கு இல்லை, அவர் கட்சியில் இருந்தே நீக்கப்படுகிறார் என்றும் ராமதாஸ் அறிவித்து மகள் காந்திக்கு பாமக கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் மேடையில் ஏற்றி முக்கியத்துவம் கொடுத்து வந்தார். சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்தனர். ஆனால், மருத்துவமனைக்கு சென்ற அன்புமணி, ராமதாசை சந்திக்காமல் அவர் ஐசியூவில் இருப்பதால் பார்க்க முடியவில்லை எனக் கூறி விட்டு திரும்பினார். ஆனால், நான் ஐசியூவில் இல்லை. அன்புமணி பார்க்காமல் சென்றுவிட்டார் என்று ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தர்மபுரியில் ஒருங்கிணைந்த பாமக பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், பாட்டாளி இளைஞர் சங்கத்தலைவராக ஜி.கே.எம்.தமிழ்க்குமரனை அறிமுகப்படுத்தி வைத்து பேசியதாவது: தமிழ்க்குமரனுக்கு பாட்டாளி இளைஞர் சங்க தலைவராக பொறுப்பு வழங்கி உள்ளேன். இந்த மாவட்டத்திற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்ப்பார். கட்சி பொறுப்பேற்று முதல் முதலாக, உங்கள் மாவட்டத்திற்கு தான் வந்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். பெருமைக்குரிய இந்த மண்ணில், ஒரு புதிய அறிவிப்பு அறிவிக்கிறேன். செயல்தலைவர் என்ற பொறுப்பை உருவாக்கினேன். தனக்கு தகுதி இல்லை என்று ஒருவர் கூறி, அதை வேண்டாம் என்று கூறி விட்டார். அதனால், செயல்தலைவர் பொறுப்பை என்னுடைய பெரிய மகள் காந்திக்கு அளித்துள்ளேன். அவர் கட்சிக்கும், எனக்கும் பாதுகாப்பாக இருப்பார்.

புதுச்சேரி செல்லும் இடத்தில் ஓட்டாண்டி என்ற ஊர் உள்ளது. அந்த வழியாக செல்லும் லாரியில், ஒருகால் நொண்டியானவன் லாரியில் தொத்திக்கொள்வான். பின்னர் அங்குள்ள ஆலமர கிளையை பிடித்து தொங்குவான். அந்த வழியாக செல்பவர்களை பார்த்து தொலைச்சிடுவேன் என்று கூறுவான். அந்த நொண்டியின் முகத்திரை ஒருநாள் கிழிக்கப்பட்டது. இப்போது சில பேர், இது எங்க கட்சி என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். உழைப்பு இருந்தால் பரவாயில்லை. உழைப்பே இல்லை. இது யார் போட்ட விதை?. உனக்கும் இந்த கட்சிக்கும் என்ன சம்பந்தம்?. ஒரு சம்பந்தமும் கிடையாது. 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று, இந்த கட்சியை வளர்த்துள்ளேன்.
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளோம். அது தேர்தலுக்கு முன்போ, பிறகோ நடக்கும். இதற்கான போராட்ட தேதியை விரைவில் அறிவிப்போம். 2026 சட்டமன்ற தேர்தலில் நான் வெற்றிக் கூட்டணி அமைப்பேன். நாம் எந்த பக்கம் செல்கிறோமோ, அந்த கூட்டணி தான் வெற்றி கூட்டணி. செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என்னுடைய பெரிய மகள், என்னையும் பார்த்துக் கொள்வார், பாட்டாளிகளையும் பார்த்துக் கொள்வார். தமிழ்க்குமரனும் உங்களுக்காக நாளும் உழைப்பார். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

‘கட்சி எங்களுக்குத்தான் விரைவில் வெற்றி பெறுவோம்’; தர்மபுரி பொதுக்குழு முடிந்ததும் காரில் புறப்பட்ட ராமதாசிடம் உங்களது மகள் காந்திக்கு, திடீரென செயல் தலைவர் பொறுப்பு வழங்குவதற்கு காரணம் என்ன? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், அந்த பொறுப்பு காலியாக உள்ளது. அந்த பொறுப்பை ஏற்கனவே ஒருவருக்கு கொடுத்தேன் (அன்புமணி பெயரை சொல்லாமல்), அவர் ஏற்கவில்லை. எனவே, எனது மகள் காந்திக்கு கொடுத்துள்ளேன் என்றார்.குடும்ப அரசியலுக்கு எதிரான நீங்கள், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்பு வழங்குவதாக கூறப்படுகிறதே? என்ற மற்றொரு கேள்விக்கு, கட்சியை கவனித்துக் கொள்ள வேண்டும். என்னையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்குப் பொருத்தமானவர் தான் காந்தி என்றார்.
தொடர்ந்து, தேர்தல் ஆணையம் உங்களுக்கு அங்கீகாரம் வழங்கவில்லையே என்ற கேள்விக்கு, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு இருக்கிறோம். அதில் எங்களுக்கு தான் வெற்றி கிடைக்கும். கட்சி என்பது நாங்கள் தான். நாங்கள் தான் வெற்றி பெறுவோம். வெகு விரைவில் வெற்றி அறிவிப்பு வெளியே வரும் என்றார். பின்னர், மாம்பழ சின்னம் குறித்த கேள்விக்கு, தரமான கேள்வியை கேளுங்கள் என கூறிய ராமதாஸ், மேற்கொண்டு பதில் அளிக்காமல் சென்று விட்டார்.

`இப்போது பதில் சொல்ல முடியாது’;அன்புமணி காட்டம்: திருப்பூர் நொய்யல் ஆற்றில் கழிவுகள் கலந்து மாசடைந்து உள்ளதாகவும், நொய்யல் ஆற்றின் மாசுபாட்டை தடுத்து மீட்க வலியுறுத்தி அன்புமணி தலைமையில் திருப்பூர் வளம்பாலம் நொய்யல் ஆற்றங்கரை ஓரத்தில் நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவரிடம், பாமக செயல் தலைவராக காந்தி நியமிக்கப்பட்டுள்ளது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, “தேர்தல் நிலைபாட்டை விரைவில் அறிவிப்பேன். நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும், எப்படி கேட்டாலும் அதெல்லாம் உட்கட்சி விவகாரம். அதற்கு பதில் இப்போது சொல்ல முடியாது” என்றார்.

ராமதாஸ் நெஞ்சில் ஏறி மிதிப்பதா? அன்புமணி மீது அக்கா தாக்கு: பாமக செயல் தலைவராக அறிவிக்கப்பட்டதும் அன்புமணியின் அக்கா காந்தி பேசுகையில், ‘தர்மபுரி வன்னியர் மண். ராமதாசின் மண். அவர் இங்கு பிறக்கவில்லை என்றாலும், அடுத்த பிறவியில் இந்த மண்ணில் பிறக்க வேண்டும். நமது வெற்றியை தர்மபுரி தான் கொடுக்கும் என்று சொன்னால் மிகையாகாது. அடுத்த பிறவியில் அவரது மகளாகவே நான் பிறக்க வேண்டும். அவரால் அடையாளம் காட்டப்பட்டு, அரசியலில் பதவி பெற்றவர்கள், நெஞ்சின் மீது ஏறி மிதித்து, துரோகம் இழைத்தவர்களை கூட தாங்கி, வெற்றி பெறும் காலம் விரைவில் வரப்போகிறது. அவரது மகளாக இல்லாமல், ஒரு படி மேலே போய், உங்களில் ஒரு தொண்டனாக இருப்பேன். ஒற்றைத் தலைமையாக ராமதாஸ் இருக்கும் வரை, நமக்கு தோல்வி இல்லை என்ற நம்பிக்கையை உங்களிடம் பதிவு செய்கிறேன்,’ என்றார்.

மகன் போனார்… மகள் வந்தார்: வன்னியர் சங்கங்களை ஒருங்கிணைத்து, கடந்த 1989ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியை ராமதாஸ் தொடங்கிய போது, எனக்கு பதவி ஆசை கிடையாது. நானோ, என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ தேர்தலில் போட்டியிட மாட்டோம். எந்த பதவிக்கும் வரமாட்டோம் என்று உறுதியளித்தார். ஆனால், காலப்போக்கில் தனது மகன் அன்புமணியை தேர்தல் அரசியலுக்குள் கொண்டு வந்த ராமதாஸ், கூட்டணி கட்சிகளின் தயவுடன் அவரை ஒன்றிய அமைச்சராக்கி அழகு பார்த்தார். ஒரு கட்டத்தில் அவரை பாமகவின் தலைவராகவும் அமர்த்தினார். ஆனால், நாளடைவில் கட்சியில் அன்புமணியின் கை ஓங்கி, தான் ஓரங்கட்டப்படுவதாக உணர்ந்த ராமதாஸ், அன்புமணியிடம் இருந்து பாமக தலைவர் பதவியை பறித்து, செயல் தலைவராக அறிவித்தார். மேலும், தன்னுடைய வீட்டைச் சேர்ந்த பெண்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்றும் ராமதாஸ் கூறியிருந்தார். ஆனால், கடந்த 2023ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தனது மருமகள் சவுமியா அன்புமணியை தர்மபுரி தொகுதியில் போட்டியிட வைத்தார். அதில் அவர் தோல்வியடைந்தார். சமீபத்தில், தனது விருப்பத்திற்கு மாறாக சவுமியா தேர்தலில் போட்டியிட்டதாக ராமதாஸ் கூறியிருந்தார். பின்னர், அன்புமணி தொடர்ந்து தனக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால், தனது மூத்த மகள் காந்தியை கட்சிக்கூட்டங்களில் முன்னிலைப்படுத்தி வந்தார். இந்த நிலையில் தான், பாமகவின் செயல் தலைவராக மகன் அன்புமணிக்கு பதிலாக மூத்த மகள் காந்தியை அறிவித்துள்ளார்.

Tags : PMK ,Anbumani ,Ramadoss ,Dharmapuri ,Gandhi ,Pattanur, Villupuram district ,Mukundanai ,PMK Youth Union ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி