×

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது சென்னை அருகே புயல் உருவாகிறது: செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று வலுப்பெற்றது. இது சென்னை அருகே புயலாக நாளை உருவாகிறது. இதன் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆழ்கடலிலுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக சமீபத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மட்டுமே வலுப்பெற்றது.

அதேநேரம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ வலுவடையவில்லை. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்த போதிலும் பெரிய அளவில் மழை என்பது இல்லை. இதனிடையே வலு குறைந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியதால் மழைப்பொழிவு என்பது குறைந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சென்னையை பொறுத்தவரை நேற்று காலையில் மழை பெய்தது. அதன் பிறகு வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விஞ்ஞானி பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று நேற்று முன்தினம் மாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலவியது. இது, நேற்று காலை 5.30 மணி அளவில், மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 8.30 மணி அளவில் அதே பகுதிகளில், போர்ட் பிளேயரிலிருந்து (அந்தமான் தீவுகள்) மேற்கு-தென்மேற்கே சுமார் 440 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 970 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 970 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 990 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 26ம் தேதி (இன்று) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 27ம் தேதி (நாளை) காலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடைந்து, வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். 28ம் தேதி வாக்கில் தீவிரப்புயலாக வலுப்பெறக்கூடும். மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோர பகுதிகளில், மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிர புயலாக 28ம் தேதி மாலை, இரவு நேரத்தில் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 27ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

28ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான, கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மாலை முதல் காற்றின் வேகம் உயர்ந்து மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 27ம் தேதி மாலை முதல் காற்றின் வேகம் உயர்ந்து மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும், 28ம் தேதி காலை முதல் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலிலுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 14 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு 13 செ.மீ, காக்காச்சி 11 செ.மீ, கன்னியாகுமரி பாலமோர் 9 செ.மீ, மாஞ்சோலை 9 செ.மீ, திற்பரப்பு 8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். வங்கக்கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒருவேளை கணிப்பின்படியே ஆந்திரா நோக்கி சென்றால் தமிழகத்துக்கு மழை பாதிப்பு இருக்காது. ஆனால் சென்னை அருகே கடந்து ஆந்திராவை நோக்கி சென்றால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் புயலை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

* மொன்தா புயல்
வங்கக்கடலில் நாளை உருவாக உள்ள புயலுக்கு ‘மொன்தா’ என்று வானிலை ஆய்வு மையம் பெயர் வைத்துள்ளது.

Tags : Chennai ,Chengalpattu ,Tiruvallur ,Kanchipuram ,Bay of Bengal ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!