×

புரெவி புயலால் பாதித்த தோட்ட பயிருக்கு மத்தியக்குழு நிவாரணம் அறிவிக்க வேண்டும்

நாகை,டிச.30: புரெவி புயலால் பாதித்த தோட்டக்கலை பயிருக்கும் மத்திய குழு நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். புரெவி புயல் காரணமாக கடந்த மாதம் காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் நாகை மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சேதம் அடைந்தது. தோட்டக்கலை பயிர்களும், பணப்பயிர்களும் இந்த புயலின் காரணமாக சேதம் அடைந்தது. இந்நிலையில் புரெவி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு நேற்று புதுக்கோட்டை வந்தது. இதை தொடர்ந்து இன்று (30ம் தேதி) நாகை மாவட்டத்தில் பார்வையிட்டு தஞ்சை மாவட்டம் செல்கிறது. இதன் இடையே புரெவி புயலால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட வரும் மத்திய குழு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் அறிவிக்க வேண்டும், தோட்டக்கலை பயிர் மற்றும் பணப்பயிர் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இவைகளுக்கும் நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது பாலையூர் தமிழ்ச்செல்வன் (கடை மடை விவசாயிகள் சங்க தலைவர்): புரெவி புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் பாதிப்படைந்துள்ளது. அதே போல் பணப்பயிர் மற்றும் தோட்டக்கலை பயிர்களும் பாதிப்படைந்துள்ளது. இவை இன்னும் கணக்கு எடுக்கவில்லை. எனவே நெற் பயிருக்கு 100 சதவீதம் இழப்பீடு வழங்க வேண்டும். தோட்டக்கலை பயிர் மற்றும் பணப்பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். கஜா புயலின் போது பாதித்த நெற் பயிருக்கு இன்று வரை இழப்பீடு வழங்கப்படவில்லை. அது போல் புரெவி புயலால் பாதித்த நெற் பயிருக்கும் இழப்பீடு வழங்காமல் விட்டுவிடக்கூடாது. நிவாரணத்தொகை என்பது நிலத்தின் உரிமையாளருக்கு கிடைப்பதை விட்டு நிலத்தை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்யும் விவசாயிக்கு நிவாரணம் கிடைக்க செய்யவேண்டும் என்றார்.

விவசாயிகள் கோரிக்கை வயலில் இறங்கி பார்வையிட வேண்டும்
மன்னை மதியழகன் (தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விவசாய பிரிவு முன்னாள் மாநிலத்தலைவர்): காவிரி டெல்டா மாவட்டங்களை பார்வையிட வரும் மத்திய குழு மேம்போக்காக நின்று ஆய்வு செய்வதை கைவிட வேண்டும். வயலில் இறங்கி ஒவ்வொரு நெற்பயிராக பார்த்து ஆய்வு செய்ய வேண்டும். அப்பொழுது தான் அறுவடை காலத்தில் நெற் பயிரில் ஏற்பட்ட பாதிப்பை உணர முடியும். எனவே அறுவடை காலத்தில் விவசாயிக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டை கணக்கீடு செய்து அதற்கு ஏற்ப நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்றார்.

பாதிப்பு அடிப்படையில் நிவாரணம்
தர் (தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில ஒருங்கிணைப்பாளர்): காவிரி டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை தொடங்கி விட்டதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நேரத்தில் காலதாமதமாக மத்திய குழு பார்வையிட வருகை தருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்யும் மத்திய குழு உடனே அறிக்கையை சமர்பித்து நிவாரணம் காலதாமதம் இன்றி கிடைக்க செய்ய வேண்டும். பரிசோதனை கொண்டு நிவாரணம் வழங்காமல் பாதிப்பு அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

Tags : Central Committee ,storm ,Burivi ,
× RELATED பாஜக மாநில மையக்குழு கூட்டம்: தொகுதிப்...