சட்டமன்ற தேர்தல் 2021க்கான வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்

கரூர், டிச. 30: சட்டமன்ற தேர்தல் 2021க்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைள் குறித்து கலெக்டர் மலர்விழி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கான வாக்கு எண்ணும் மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் மலர்விழி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வாக்குப்பதிவு முடிந்து அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இருந்தும் கொண்டு வரப்படும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான இடம், வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்கள் எந்த வழியே வந்து எந்த வழியாக செல்ல வேண்டும் என்பது குறித்தும், வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படும் வாகனங்களை நிறுத்துவது, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்த கலெக்டர், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அனைவருக்கும் இருக்கும் வகையில் உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் அறைகள் (ஸ்டிராங்க் ரூம்), வாக்கு எண்ணும் அறைகள், வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்களை வைக்கும் அறைகள், தேர்தல் பார்வையாளர் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கான அறைகளை தேர்வு செய்வது குறித்து கலெக்டர் அனைத்து அறைகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஷேக் அப்துல்ரகுமான், பாலசுப்ரமணியன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரியா உட்பட அனைத்து அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Related Stories:

>