×

கரூர் நகராட்சி அலுவலக நுழைவுவாயிலில் தகவல் மையம் செயல்படாததால் மக்கள் அவதி

கரூர், டிச. 30: கரூர் நகராட்சி அலுவலக நுழைவு வாயில் பகுதியில் தகவல் மையம் செயல்பாடு இல்லாத காரணத்தினால் நகராட்சிக்கு வரும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கரூர் ஆசாத் சாலையில் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நகராட்சி கூட்ட அரங்கம் உட்பட அனைத்து அலுவலகங்களும் ஒரே அரங்கில் கொண்டு வரப்பட வேண்டும் என்ற நோக்கில் கடந்த சில ஆண்டுகளாக ரூ. 7கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்றது. பணிகள் முடிந்து, கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு கரூருக்கு ஆய்வு பணிகளுக்காக வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்டிடத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டிடங்களில் செயல்பட்டு வந்த அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்த கட்டிட வளாகத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன.

மேலும், நகராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வரி கட்ட, இறப்பு, பிறப்பு பதிவு, கோரிக்கை உட்பட பல்வேறு பணிகளுக்கு தினமும் நகராட்சி அலுவலகம் வந்து செல்கின்றனர். மூன்று மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் எந்த தளத்தில் எந்த அலுவலகம் உள்ளது என்பதை தெரிவிக்க, அலுவலக நுழைவு வாயில் பகுதியில் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், தகவல் மையம் செயல்பாடு இல்லாமல் உள்ளதால், நகராட்சி அலுவலகத்துக்கு வரும் அனைத்து தரப்பினர்களும் மாடி, மாடியாக அலைந்து திரிந்து வருகின்றனர். எனவே, மக்களின் நலன் கருதி தகவல் மையத்தில் பணியாளர்களை வைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : entrance ,information center ,Karur ,office ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...