×

மா, தென்னை, கரும்பு வைத்து ஜோரான விவசாயம் பெரியகுளம் கண்மாயில் 3ல் ஒரு பங்கு ஆக்கிரமிப்பு பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெரியகுளம், டிச. 30: பெரியகுளம் கண்மாயில் மூன்றில் ஒரு பங்கு ஆக்கிரமித்து விவசாயம் நடத்தப்படுகிறது. இதை அகற்ற மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியகுளத்தில் உள்ள வராகநதியின் தென்கரையில், 200 ஏக்கர் பரப்பளவில் பெரியகுளம் கண்மாய் அமைந்துள்ளது. நகரின் பெயரில் இக்கண்மாய் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர், சோத்துப்பாறை அணை நிரம்பி, அங்கிருந்து வெளியேறும் நீரை பெரியகுளம் கண்மாயில் நிரப்புவர். இக்கண்மாயில் கீழ்ப்பகுதியில் உள்ள குளங்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இக்கண்மாயில் மூன்றில் ஒரு பகுதியை, 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்து மா, தென்னை, கரும்பு உள்ளிட்டவற்றை விவசாயம் செய்து வருகின்றனர். இதனால், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக குளத்தில் தண்ணீரை முழுமையாக நிரப்ப முடியவில்லை. விவசாயத்துக்கு நீர்ப்பற்றாக்குறையும், நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது. இந்தாண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழையால் அனைத்து கண்மாய்களும், குளங்களும் நிறைந்தன. ஆனால், பெரியகுளம் கண்மாய் நிரம்ப வேண்டிய நிலையில், அதன் முழு கொள்ளளவை எட்ட விடாமல் குளத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்துள்ளவர்கள் இரவு நேரங்களில் மதகுகளை திறந்து நீரை வெளியேற்றுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
இது குறித்து துணை முதல்வர், மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பெரியகுளம் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரி கண்மாயில் முழு கொள்ளளவு நீரை தேக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்மாய் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது