தஞ்சாவூர்: திமுகவையும், விசிகவையும் பிரிக்க முடியவில்லையே என்று சங்கிகள் குமுறுகின்றனர் என திருமாவளவன் பேசினார். தஞ்சாவூரில் விசிக உறுப்பினரின் தந்தை படத்திறப்பு விழாவில் நேற்று கலந்துகொண்ட கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி பேசியதாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக அரசோடு எவ்வாறு இணக்கமாக உள்ளது. இதுதான் பல பேருக்கு வயிற்றெரிச்சல். எவ்வளவு சொன்னாலும் திமுகவையும், விசிகவையும் பிரிக்க முடியலையே என்கின்ற சங்கிகளின் மனக்குமுறல்.
இதற்காக விடுதலை சிறுத்தை கட்சியை மிகவும் இழிவாக விமர்சிப்பது, இரண்டு சீட்டுக்கும், மூன்று சீட்டுக்கும் முட்டு கொடுக்கும் கட்சி என்று கேவலமாக பேசுவது. அதிலே அவர்களுக்கு ஒரு ஆனந்தம். மனம் போன போக்கிலே கன்னா பின்னாவென்று பேசுவது. திருமாவளவனுக்கு எதிராக, விசிகவிற்கு எதிராக விமர்சனம் செய்தால் அவர்கள் ஆத்திரப்படுவார்கள். இரண்டு கட்சிகளுக்கு இடையிலான உறவை நாம் சிதைத்து விடலாம் என்று பல பேர் எண்ணுகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.
ஏனென்றால் நாங்கள் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், காரல் மார்க்ஸ் கொள்கையை பின்பற்றி வருகின்றோம். அதே கொள்கையைத்தான் திமுகவும் பின்பற்றி வருவதால் எங்களுக்குள் எந்த ஒரு பிரிவினையும் ஏற்படாது. நீங்கள் எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும் எங்களை பிரித்தாளும் எண்ணம் தமிழகத்தில் ஒருபோதும் நடக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
