- அடையார் தொல்காப்பிய பூங்கா
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- தொல்காப்பியா
- பூங்கா
- ராஜா அண்ணாமலை புரம், சென்னை
- கலைஞர்
சென்னை: நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட அடையாறு தொல்காப்பிய பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை திறந்து வைத்தார். கலைஞர் முதல்வராக இருந்தபோது சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அடையாறு உப்பங்கழியில் 2011 ஜனவரி மாதத்தில் தொல்காப்பியப் பூங்கா திறக்கப்பட்டது. சுமார் 58 ஏக்கர் பரப்பளவில் இப்பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றத்துக்கு பின்பு அதிமுக ஆட்சியில் இந்த பூங்கா அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும், 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனையடுத்து, மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததை தொடர்ந்து இந்த பூங்காவை மேம்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
மறுமேம்பாட்டு பணிகளின் கீழ், தொல்காப்பியப் பூங்கா என பெயர் மாற்றப்பட்டு, அதில் நவீன வசதிகளுடன் பல அம்சங்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், அடையாறு தொல்காப்பியப் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று திறந்து வைத்தார். பிறகு பேட்டரி காரில் சென்று, 58 ஏக்கரில் பிரமாண்டமாக மேம்படுத்தப்பட்ட தொல்காப்பிய பூங்காவை பார்வையிட்டார். நவீன நுழைவாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மையம், காட்சியகம், 3.20 கிமீ நடைபாதை, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, திறந்தவெளி அரங்கம், இணைப்புப் பாலம், சிற்றுண்டியகம், புதிய கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பார்வையிட்டார். இதை தொடர்ந்து, சுற்றுச்சூழல் கல்விக்காக வந்த மாணவர்களுடன் பேட்டரி காரில் சென்று பூங்காவை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி, துணை மேயர் மகேஷ் குமார், தலைமை செயலாளர் முருகானந்தம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், முன்னாள் எம்எல்ஏ எஸ்.வி.சேகர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நுழைவுக்கட்டணம் எவ்வளவு?
விவரங்கள் நுழைவு
கட்டணம்
மாணவர்கள்,ஆசிரியர்கள் (தனியார் பள்ளி /கல்லூரி) ரூ.10/-
பொதுமக்களுக்கான வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணம் ரூ.20/-
நடைபயிற்சி அனுமதி ஒரு முறை நுழைவு ரூ.20/-
நடைபயிற்சி அனுமதி
(பதிவு செய்யப்பட்ட நடைபயிற்சி அனுமதி இணையதள பதிவு வாயிலாக)
1 மாதம் 3 மாதம் 6 மாதம் 12 மாதம்
ரூ.500 ரூ.1,500 ரூ.2,500 ரூ.5,000
மகிழுந்து ரூ.20/-
சிற்றுந்து, பேருந்து ரூ.50/-
புகைப்பட கருவி ரூ.50/-
ஒளிப்பதிவு கருவி ரூ.100
மேலும் நுழைவுசீட்டு கட்டணம், முன்பதிவு மற்றும் பிற விவரங்கள் www.crrt.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
* மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் அனுமதி
தொல்காப்பியப் பூங்காவை பொதுமக்கள் (ஒருவேளையில் அதிகபட்சம் 100 பேருக்கு மிகாமல்) திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் பொது விடுமுறை நாட்கள் தவிர இணையதள முன்பதிவின் மூலம் பார்வையிடலாம். மேலும், மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் கல்வி நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்கள் (பள்ளி, கல்லூரி) அதிகபட்சம் 100 மாணவர்கள் ஆசிரியர்களுடன் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை பார்வையிடலாம். சென்னை மாநகராட்சி பள்ளிகள் (செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமை) அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் (வெள்ளிக்கிழமை) தனியார் பள்ளிகள் (திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) பார்வையிடலாம். பூங்காவின் பராமரிப்புக்காக வியாழக்கிழமை விடுமுறை விடப்படும். அனைத்து நாட்களும் (திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பொது விடுமுறை நாட்கள் உள்பட) காலை 6.30 மணி முதல் 8 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
