×

ஒன்றிய அரசை போன்று 3 சதவிகித அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும்: தலைமைச்செயலக சங்க ஊழியர்கள் கோரிக்கை

சென்னை: ஒன்றிய அரசு 3 சதவிகித அகவிலைப்படியை உயர்த்தியுள்ளதால் தமிழக அரசும் உடனடியாக 3 சதவிகித அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தலைமை செயலக சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தலைவர் வெங்கடேசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் கடந்த 17.5.2023 அன்று வெளியிட்ட செய்தியில், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 1.4.2023 முதல் அகவிலைப்படி உயர்வினை 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல், ‘‘அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, எதிர்வரும் காலங்களிலும் ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை செயல்படுத்தும் ‘‘என்ற கொள்கை முடிவை அறிவித்தார்.

அதன் அடிப்படையில், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு என்பது ஒன்றிய அரசு அறிவித்த உடனேயே வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு 1.7.2025 முதல் அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி, 55 சதவீதத்தில் இருந்து 58 சதவிகிதமாக வழங்கியுள்ளது. இந்த 3 சதவிகித அகவிலைப்படி உயர்வு தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அறிவிக்கப்படும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் எந்த அறிவிப்பும் இதுநாள் வரை வெளியிடப்படவில்லை. 1.7.2025 முதல் முதல் ஒன்றிய அரசு வழங்கியுள்ள 3 சதவிகித அகவிலைப்படி உயர்வை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உடனடியாக வழங்க ஆணையிட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வரை தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் கேட்டுக் கொள்கிறது.

Tags : Chief Secretariat Association ,Union Government ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu Chief Secretariat Association ,President ,Venkatesan ,
× RELATED இறுதி சடங்கு செலவுக்கு பணம்...