மலேசியாவில் இறந்தவரின் உடலை கொண்டு வர கோரி ஆர்ப்பாட்டம் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு

மதுரை, டிச. 30: மலேசியாவில் இறந்தவரின் உடலை கொண்டு வர கோரி, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மேலஅனுப்பானடியை சேர்ந்தவர் பூமிநாதன் (35). இவரது மனைவி சாந்தி. ஒரு மகள், மகன் உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் மலேசியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பூமிநாதன் பணியில் சேர்ந்தார். கடந்த 2 1/2 மாதங்களாக, அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. அவரது செல்போனும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் கவலையடைந்த சாந்தி, உறவினர்கள் பூமிநாதன் குறித்து தகவலறிந்து தெரிவிக்கும்படி மத்திய, மாநில அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் பூமிநாதனுடன் வேலை பார்க்கும் சக பணியாளர் ஒருவர் அவர் இறந்துவிட்டதாக வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தி, உறவினர்கள் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

 பூமிநாதன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? அவரின் நிலை என்ன? என்பது குறித்து விசாரிக்கவும், அவரது உடலை மதுரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் அவர்களை போலீசார் கலெக்டரிடம் அழைத்து சென்றனர். சாந்தி, கலெக்டர் அன்பழகனிடம் மனு கொடுத்தார்.  மனுவை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதியளித்தார்.

Related Stories:

More
>