×

தி. மலை நீர் நிலைகளிலும் மலைப் பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் : உயர்நீதிமன்றம்

சென்னை: திருவண்ணாமலை, மலைப் பகுதிகளிலும், நீர் நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை தமிழ்நாடு அரசு விரைவாக அகற்ற வேண்டும் என எதிர்பார்ப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. திருவண்ணாமலையில் உள்ள தாமரைக்கேணி உள்ளிட்ட நீர் நிலைகளையும், மலையில் உள்ள ஓடைகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை உடனடியாக அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருவண்ணாமலை மலையில் ஆக்கிரமிப்பு செய்தவர்களை அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் யானை ராஜேந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மலைச் சரிவில் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓடைகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்திய நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்பார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், சிலர் பட்டா இருப்பதாகவும் தெரிவித்துள்ளது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். மலைப்பகுதிகளிலும், நீர்நிலைகளிலும் ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Tags : Supreme Court ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu government ,Tiruvannamalai ,
× RELATED கேரம் உலகக் கோப்பை போட்டியில்...