* சாலைகள் துண்டிப்பு
* பாதிப்புகள் டிரோன் மூலம் கண்காணிப்பு
திருமலை : ஆந்திர மாநிலத்தில் கடந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநில அரசு போர்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் கடந்த இரு நாட்களாக பிரகாசம் மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பியது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் எஸ்.பி. ஹர்ஷவரத ராஜூ தலைமையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக டிரோன் கேமரா மூலம் வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகள் மற்றும் வெள்ளநீரால் துண்டிக்கப்பட்ட சாலைகள் என மொத்தம் 18 இடங்கள் அடையாளம் காணப்பட்டது.
அதேபோல் வருவாய், சுகாதாரம் மற்றும் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து வெள்ளம் சூழ்ந்த ஓடைகள், ஆறுகள் மற்றும் தாழ்வான பகுதிகள் டிரோன் கேமராக்கள் மூலம் கண்டறிந்து, மக்கள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை விடுப்பட்டுள்ளது. இதுவரை, கண்டறியப்பட்ட 18 இடங்கள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கண்டறியப்பட்டு, உயிரிழப்புகளை தடுக்க முள்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.இதனால் போக்குவரத்து தடையானது. மேலும், மக்கள் நடமாட முடியாத வகையில் அங்கு எச்சரிக்கை பலகை வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக, 18 இடங்களிலும் 24 மணி நேரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓடைகள் மற்றும் ஆறுகள் அதிகமாக இருக்கும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஜேசிபிக்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஓடைகள் மற்றும் ஆறுகளுக்கு அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. வெள்ள நீர் மேலும் அதிகரித்தால், அரசு அமைத்துள்ள மறுவாழ்வு மையங்களுக்கு உடனடியாக மக்கள் செல்ல வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மறுவாழ்வு மையங்களில் உணவுப் பொருட்கள், தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயாராக உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சிறு குழந்தைகள், கைக்குழந்தைகள் மற்றும் முதியவர்களைக் கண்டறிந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டுள்ளார். போலீசார் தொடர்ந்து விழிப்புடன் இருக்கவும், அலட்சியம் காட்டாமல் இருக்கவும் என எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
