திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா 2ம் நாளான நேற்று சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. 2ம் நாளான நேற்று கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, 3.30 விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிக்கால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்ற உடன் யாகசாலையில் மகா தீபாராதனை நடந்தது.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கச்சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபத்தை வந்தமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது சுவாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் சண்முகவிலாசத்தில் குவிந்தனர். மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் வைத்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்து சுவாமி தங்க ரதத்தில் எழுந்து கிரிவீதி வலம் வந்து அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு காட்சியளித்தார். வரும் அக்.26ம் தேதி கந்தசஷ்டி 5ம் நாள் வரை இதே நிகழ்ச்சிகளும், அக். 27ம் தேதி திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் கோயில் கடற்கரையில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது.
கந்தசஷ்டியை முன்னிட்டு கோயில் வளாகம் மற்றும் கிரிப்பிரகாரத்தில் தங்கி பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். அவர்கள் ஓம் சரவண பவ என்பது உள்ளிட்ட முருகர் நாமத்தை எழுதியும், கந்தசஷ்டி கவசம் படித்தும், குழுவாக முருகர் பக்திப் பாடல்களை பாடியும் வருகின்றனர். இதனால் கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
