×

காஸ் சிலிண்டர் விபத்தில் பலி டிரைவர் உடலை வாங்க மறுத்து 2ம் நாளாக உறவினர்கள் போராட்டம்

கேடிசி நகர், டிச. 30:  திருவேங்கடத்தில் உள்ள தனியார் காஸ் குடோனில் ராஜபாளையம் மம்சா புரத்தை சேர்ந்த வைகுண்டம் (70), நெல்லை தாழையூத்து சண்முகாபுரத்தை சேர்ந்த டிரைவர் காளி (36) வேலை பார்த்தனர். கடந்த 23ம் தேதி பழுதடைந்த காஸ் சிலிண்டரை சீரமைக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த வைகுண்டம், காளி, ஊழியர் பசுபதிபாண்டியன் ஆகிய மூவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி வைகுண்டமும், காளியும் உயிரிழந்தனர். இதையடுத்து வைகுண்டத்தின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுச் சென்ற போதும், இழப்பீடு வழங்கக் கோரி காளியின் உடலை  வாங்க மறுத்து நெல்லை அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்டனர். 2வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், ஊர் நாட்டாண்மை கருத்தபாண்டி தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து உரிய நஷ்ட ஈடு வழங்கக் கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மனு விவரம்: தீ விபத்தில் பலியான காளியை இழந்துவாடும் அவரது மனைவி உமாசக்தி, மகள்கள் இந்துமதி (16), இசைராணி (8) ஆகியோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு வழிவகை செய்ய வேண்டும். உமாசக்திக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் உமாசக்தி, அவரது இரு மகள்கள், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் வண்ணை முருகன், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத் தலைவர் மாரியப்ப பாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் மாசிலாமணி, தேவேந்திரகுல எழுச்சி இயக்க நிறுவன தலைவர் கண்ணபிரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அதிகாரிகள், சமுதாய பிரதிநிதிகள், தனியார் காஸ் ஏஜென்சி நிறுவனத்தினர் பங்கேற்ற சமாதானப் பேச்சுவார்த்தை தாழையூத்து சண்முகாபுரத்தில் நடந்தது.
இதில் தனியார் காஸ் ஏஜென்சி நிறுவனம் சார்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இதேபோல் முழு இன்சூரன்ஸ் திட்டத்தில் காப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உறவினர்கள், போராட்டத்தை கைவிட்டு உடலை பெற்றுச்சென்றனர்.

Tags : Relatives ,gas cylinder accident ,
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...