×

தேவர்குளம் அருகே ஓய்வுபெற்ற வங்கி மேலாளரின் வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் ரூ.7 லட்சம் ‘அபேஸ்’

நெல்லை, டிச. 30:  தேவர்குளம் அருகே ஓய்வுபெற்ற அரசு வங்கி மேலாளரிடம் ஆன்லைன் மூலம் ரூ.7 லட்சத்தை பண மோசடி செய்த மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நெல்லை மாவட்டம், தேவர்குளம் அருகேயுள்ள மேலஇலந்தைகுளத்தை சேர்ந்தவர் உமாசங்கர் (67). கோவையிலுள்ள அரசு வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர்  தற்போது குடும்பத்துடன் மேல இலந்தை
குளத்தில் வசித்து வருகிறார். இவரது வங்கி கணக்கில் ரூ.7 லட்சத்து 10 ஆயிரம் உள்ளது. இவர் வயது காரணமாக அடிக்கடி வங்கிக்கு சென்று பணம் எடுப்பதற்கு பதிலாக அவரது செல்போனில் வங்கி கணக்கினை ஆபரேட் செய்வதற்கான வசதியை ஏற்படுத்தி இருந்தார்.

இவர் கடந்த 26ம் தேதி செலவிற்காக ரூ.5 ஆயிரத்தை எடுப்பதற்காக தன்னுடைய செல்போன் மூலம் வங்கி கணக்கில் எடுப்பதற்கு ஆப்களில் நுழைந்தார். இதனையடுத்து சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.3 லட்சத்து 3 ஆயிரம் பணமும் அதற்கு அடுத்த மறுநாள் (27ம் தேதி) ரூ.4 லட்சத்து 5 ஆயிரமும் மர்ம நபர்கள் எடுத்திருப்பது தெரிய வந்தது. இதனால் அவரது செல்போனிலிருந்து பண பரிமாற்றம் செய்யக்கூடிய ஆப்களின் செயல்பாடுகளை நிறுத்தினார்.

இதுகுறித்து உமாசங்கர் கணக்கு வைத்திருந்த அரசு வங்கியிலுள்ள அதிகாரிகளிடம் புகார் செய்தார். ஆனால் வங்கி நிர்வாகம் தங்களுக்கு எதுவும் தெரியாது. வேறு யாரோ பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து தேவர்குளம் போலீசில் உமாசங்கர் புகார் செய்தார். இதன் பேரில் தேவர்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர், எஸ்ஐ ரெங்கசாமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில், புதுடில்லியிலிருந்து மர்ம நபர்கள் உமாசங்கரின் வங்கி கணக்கில் செல்போன் ஆப்கள் மூலம் பணத்தை திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து நெல்லை மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : bank manager ,Thevarkulam ,
× RELATED இறந்த வாடிக்கையாளர்கள் பெயரில் மோசடி...