அமராவதி: ஆந்திர மாநிலம் கர்னூல் சாலையில் பேருந்து தீப்பிடித்து 20 பேர் பலியாகியுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 42 பேர் பயணித்தனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன டிக்கூர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது ஆம்னி பஸ்சில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் பஸ்சில் உறங்கிக்கொண்டிருந்த பயணிகள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். தீ மளமளவென பஸ்சின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இதையடுத்து, பயணிகள் அலறியடித்துக்கொண்டு பஸ்சில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றனர். இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் சிக்கி 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
ஆனாலும், எஞ்சிய பயணிகளில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 15 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் பலருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
