×

நடராஜர் இன்று மாடவீதியில் பவனி 9 மாதங்களுக்கு பிறகு தடை நீங்கியது திருவண்ணாமலையில் ஆருத்ரா தரிசனம்

திருவண்ணாமலை, டிச.30: திருவண்ணாமலையில் ஆருத்ரா தரிசனத்ைதயொட்டி நடராஜர் இன்று மாடவீதியில் பவனி வருகிறார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தீபத்திருவிழா உட்பட கோயிலில் நடைபெற்ற அனைத்து விழாக்களின்போதும், சுவாமி வீதியுலா கோயில் பிரகாரத்துக்குள் மட்டுமே நடத்தப்பட்டன. மாடவீதியில் சுவாமி பவனி ரத்து செய்யப்பட்டது. மேலும், கோயில் 5ம் பிரகாரத்தில் நடந்த சுவாமி பவனியையும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. அதனால், பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருந்தனர்.

இந்நிலையில், அண்ணாமலையார் கோயில் விழாக்களின்போது சுவாமி வீதியுலா மாடவீதியில் நடத்த, கடந்த 9 மாதங்களுக்கு பிறகு தற்போது மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அதன்படி, இன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின்போது நடராஜர் வீதியுலாவை மாடவீதியில் நடத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று இரவு சிவகாம சுந்தரி சமேத நடராஜர் எழுந்தருளினார். இன்று காலை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். அப்போது, மகா தீப மை, நடராஜருக்கு அணிவிக்கப்படும்.
இதையடுத்து சிவகாமசுந்தரி சமேத நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக புறப்பட்டு, மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாடவீதியில் சுவாமி பவனியின்போது, கொரோனா பரவல் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். கடந்த 9 மாதங்களுக்கு பிறகு, மாடவீதியில் சுவாமி பவனி வரும் நிகழ்வை தரிசிக்க பக்தர்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர்.

Tags : Natarajar ,Bhavani ,Madaveedi Arutra Darshan ,Thiruvannamalai ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...