×

காஞ்சிபுரம் அருகே ஆற்பாக்கம் கிராமத்தில் கல்குவாரியை பொதுமக்கள் முற்றுகை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஆற்பாக்கத்தில் செயல்படும் கல்குவாரிகளால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன், வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால், அதனை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் வட்டம் ஆற்பாக்கம் கிராமம், விவசாயத்தையே பிரதானமாக கொண்டுள்ளது. இங்குள்ள மக்கள் தற்போது கல்குவாரி தொழிற்சாலைகளால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளதாக கூறுகின்றனர். இங்கு செயல்படும் எம்சாண்ட் கலவை தொழிற்சாலைகளில் உருவாகும் கழிவுகளை, அந்த கிராம மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் கொட்டப்படுகிறது.

இதனால், கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்ல முடியவில்லை. பல லட்சம் செலவில் குடிமராமத்து செய்யப்பட்ட ஏரியில், தற்போது பெய்த கனமழையால் விவசாயித்துக்கு போதுமான தண்ணீர் உள்ளது. இந்தவேளையில், கல்குவாரிகள் சட்டவிரோதமாக மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி தொழிற்சாலைகளில் பயன்படுத்தி, அதன் கழிவுகளை மீண்டும் ஏரியில் புதை வடிகால் குழாய் மூலம் விடுகின்றனர். இதனால் ஏரி தூர்ந்து போய் மீண்டும் நீர் சேமிக்க இயலாத நிலை உருவாகும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், தங்களது விவசாய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும் என கூறி அப்பகுதி இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கல் அரவை தொழிற்சாலையை நேற்று கல்குவாரியை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து மாகரல் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது, கல்குவாரியை உடனடியாக மூட வேண்டும் என பொதுமக்கள் கோஷமிட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையொட்டி, மேற்கண்ட பகுதியில் முறையான  ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : siege ,village ,Arpakkam ,Kanchipuram ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...