×

அரிசியை செறிவூட்டும் திட்டத்திற்கான அனுமதியை ஒன்றிய அரசிடம் விரைந்து பெறவேண்டும்: தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்டா பகுதிகளில் இந்த மாதம் முதல் வாரத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் நெல் மூட்டைகள் உடனடியாக கொள்முதல் செய்யப்படாததால் திறந்தவெளி கொள்முதல் நிலையங்களிலும், சாலையோரங்களிலும் விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால், உடனடியாக கொள்முதல் செய்யப்படவில்லை. இதன் விளைவாக நெல் மூட்டைகள் திறந்த வெளியில் குவிந்து வருவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஒரு நாளைக்கு 1,000 மூட்டைகள் ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையத்திலும் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆகியோர் தெரிவித்து இருக்கிறார்கள். ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் நான்காயிரம், ஐந்தாயிரம் நெல் மூட்டைகள் கொள்முதலுக்காக காத்திருக்கின்ற நிலையில், ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவது போதுமானதில்லை. அரிசி செறிவூட்டல் திட்டத்திற்கான அனுமதியை ஒன்றிய அரசு இன்னமும் வழங்காததே நெல் கொள்முதல் தாமதத்திற்கு காரணம் என்று உணவுத் துறை அமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஒன்றிய அரசு அதிகாரிகளிடம் தமிழக அரசு அதிகாரிகள் தொடர்பு கொண்டு விரைந்து அனுமதியை பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : O. Panneerselvam ,Tamil Nadu government ,Union government ,Chennai ,Former ,Chief Minister ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...