- நாமக்கல் மாவட்டம் செந்தமங்கலம் தொகுதி திமுக
- சட்டமன்ற உறுப்பினர்
- தலைமை எம்எல்ஏ
- கே. ஸ்டாலின்
- நாமக்கல்
- சேந்தமங்கலம் தொகுதி
- திமுகா
- பொன்னுசாமி
- துணை தலைமை உதவி செயலாள
- ஸ்டாலின்
- மாவட்டம்
- செந்தமங்கலம் தொகுதி திமுக சட்டமன்றம்
நாமக்கல்: சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமி, நேற்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கலெக்டர் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி (74). இவரது மனைவி ஜெயமணி. இவர்களுக்கு மாதேஸ்வரன் என்ற மகனும், பூமலர் என்ற மகளும் உள்ளனர். மகன், மகள் இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
பொன்னுசாமியின் சொந்த ஊர், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு ஊராட்சி எல்லைகிராய் கிராமம் ஆகும். இங்குள்ள வீட்டில் பொன்னுசாமி வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கியவருக்கு, நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் செம்மேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை 7.45 மணியளவில் பொன்னுசாமி எம்எல்ஏ உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். மறைந்த பொன்னுசாமி, நாமக்கல் மாவட்ட திமுக துணை செயலாளராகவும், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 2006-2011 வரை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார். கடந்த 2011ல் நடந்த சட்டமன்ற தேர்தலில், இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பின்னர், கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மாவட்ட கூட்டுறவு வங்கி துணை தலைவராகவும் பணியாற்றி வந்தார். பொன்னுசாமி எம்எல்ஏவின் உடல், கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி புளியங்காட்டில் உள்ள அவரது மகன் மாதேஸ்வரன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி மறைந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்று இரண்டு முறை அவர்களது பிரதிநிதியாகச் சட்டமன்றத்தில் மக்கள் பணி ஆற்றிய அவரது மறைவு அத்தொகுதி மக்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பேரிழப்பாகும்.
கழகத்தின் மீது தீவிரப் பற்றும், கலைஞர் மீதும் – என் மீதும் பேரன்பும் கொண்டு செயலாற்றி வந்த அவர், நாமக்கல் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளராக கழகத்தை வளர்த்ததோடு, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டவர். அவரது மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் சேந்தமங்கலம் தொகுதி மக்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுவாழ்வில் அவருக்கு துணை நின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறி உள்ளார்.
* துணை முதல்வர் நேரில் அஞ்சலி
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று மாலை 4.45 மணிக்கு புளியங்காடு கிராமத்திற்கு வந்து, பொன்னுசாமி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் எ.வ.வேலு, ராஜேந்திரன், சிவசங்கரன், மதிவேந்தன், முத்துசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் துர்காமூர்த்தி, எம்பிக்கள் ராஜேஸ்குமார், எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி, மாதேஸ்வரன், எம்எல்ஏக்கள் பூண்டி கலைச்செல்வன், ராமலிங்கம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன், மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி உள்ளிட்டோர் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, பொன்னுசாமி எம்எல்ஏவின் உடல், கொல்லிமலையில் வாழவந்திநாடு கிராமத்தில் உள்ள எல்லைக்கிராய் பகுதியில் இருக்கும், அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இன்று (24ம் தேதி) மதியம், பொன்னுசாமி எம்எல்ஏவின் உடல், கொல்லிமலையில் உள்ள அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
