ஏற்காடு, அக்.24: ஏற்காட்டில், குப்பனூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஏற்காட்டில் நேற்று முன்தினம் காலை முதலே கனமழை கொட்டி தீர்த்தது. மழையால் பல்வேறு இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு நிலவியது. கடும் குளிரால் உள்ளூர் மக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. கனமழையின் காரணமாக, குப்பனூர் மலைப்பாதையில், கொட்டச்சேடு கிராமம் அருகே, சாலை தடுப்பு சுவர் சரிந்து விழுந்தது. இதையறிந்து சம்பவ இடம் சென்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், மண் மூட்டைகள் அடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி, ஏற்காடு குப்பனூர் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
