×

குன்னூர் நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரம் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக வருவாய் துறை செயல்படுவதாக குற்றச்சாட்டு

குன்னூர், டிச.30: குன்னூரில் ஆற்றோரத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, குன்னூர் பேருந்து நிலையம்  டி.டி.கே.,ரோடு, ஆட்டோ ஸ்டாண்ட் எதிரே ஆற்றோர கடைகளில், கூடுதல் கலெக்டர் ரஞ்ஜித் சிங்  தலைமையில், தாசில்தார் மற்றும் ஆர்.ஐ., கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கடைகளை இடிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டு கடைகளை காலி செய்ய கால அவகாசம் முடிவடைந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம்  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சில கடைகள் மட்டும் இடிக்கப்பட்டது. இதில், குன்னுார் டி.டி.கே.சாலை உள்ளிட்ட இடத்தில்  ஆற்றோரத்தில்
மொத்தம் 42 கடைகள் முதற்கட்டமாக இடிக்கப்பட்டன.

ஆனால், பேருந்து நிலையம் எதிரே உள்ள கடைகளை இடிக்காமல் விட்டு சென்றனர். வருவாய் துறையினர் ஒருதலை பட்சமாக நடந்து கொண்டதாக கடைகளை இழந்தோர் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மீண்டும் குன்னூர் ஆற்றின் கரையோரங்களில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அதிகரித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், குன்னூர் வருவாய் துறையினர் கடந்த 24ம் தேதி பேருந்து நிலையம் எதிரே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி சென்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இது குறித்து குன்னூர் தாசில்தார் சீனிவாசனிடம் கேட்டபோது, கடை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் தடையாணை வாங்கி உள்ளதாக கூறினார். ஆனால், அதற்கான நகல் குறித்து வருவாய் துறையினர் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் கூறியாதவது:ஆக்கிரமிப்பு என்பது ஒரு கிரிமினல் குற்றம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணி கூறு ள்ளார். குன்னூர் பேருந்து நிலையம் மற்றும் ஆற்றோர இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக குன்னூரில்  ஆக்கிரமிப்புகள்  அகற்றப்படாமல் உள்ளன. பொது இடத்தை ஆக்கிரமித்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற தோற்றத்தை இது ஏற்படுத்தி உள்ளது. அரசு நீர் ஆதாரங்கள் மீது கவனம் செலுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். ஆற்றோர இந்த பகுதிகள் குன்னூர் தாலுகாவில் 0.85 ஹெக்டர்  அளவிலான  இடங்கள் ஆறு என வருவாய் துறை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆற்றின் அருகிலேயே பஸ் ஸ்டாண்ட் உள்ளதால் இந்த ஆக்கிரமிப்புகளால் பேருந்து நிலைய விரிவாக்கப் பணி தடைபடுகிறது. பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. குன்னூர் வட்டாட்சியர் தனது அறிக்கையில்  ஆக்கிரமிப்பாளர்கள் ரிட் பெட்டிஷன் போட்டவர்கள் வழக்கு மேல் வழக்கு தொடுத்துவருவதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆற்றோர ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு நோட்டீஸ் வழங்குவதும், தடை வாங்கியதாக கூறி காலம் தாழ்த்தி வருவது தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகிறது. எனவே, நீதிமன்ற உத்தரவை முறையாக செயல்படுத்த வேண்டிய அதிகாரிகளே ஆக்ரமிப்பாளர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வருவது   சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Coonoor ,Revenue Department ,
× RELATED பள்ளி மாணவி கர்ப்பம் ஆசிரியர் மீது வழக்கு