×

வங்கி விவரங்களை கேட்கும் மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம்

கோவை, டிச. 30:  இணையதளத்தில் முன்பதிவு செய்த ரயில் பயணச்சீட்டை ரத்து செய்வதற்காக, வங்கி விவரங்களைக் கேட்கும் மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.  ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் 3,400-க்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டன. செப்டம்பர் 7-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு காலத்தில் ரயிலில் பயணிக்க இணையத்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு, இணையம் வழியாகவே பயணச்சீட்டுக் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.

ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு, அந்தந்த ரயில் நிலையங்களில் கடந்த ஜூன் 3-ம் தேதி முதல் சிறப்பு மையங்கள் துவங்கப்பட்டு, முன்பதிவு ரத்து கட்டணங்கள் திருப்பி செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இணையத்தின் மூலம் முன்பதிவு பயணச்சீட்டுகளை ரத்து செய்வதற்கு, ரயில்வே அதிகாரிகள் எனக் கூறி தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்ளும் நபர்களிடம் வங்கி விவரங்கள், ஏ.டி.எம். கார்டு பாஸ்வார்டு உள்ளிட்டவற்றை தெரிவிக்க வேண்டாம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: இணையதளம் மூலமாக பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, அவர்களுக்கு பயணச்சீட்டு வழங்கப்பட்ட வங்கிக் கணக்குகளிலேயே, பயணச்சீட்டு ரத்துக் கட்டணங்களும் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. ரயில்வே அதிகாரி எனக்கூறி பயணிகளிடம் சிலர், டெபிட், கிரெடிட் கார்டு எண்கள், சி.வி.வி. எண்கள், ஒ.டி.பி. எண், ஏ.டி.எம். பாஸ்வேர்டு, பான் கார்டு எண், பிறந்த தேதி மற்றும் வங்கி விவரங்களை கேட்பதாக ரயில்வே நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான விவரங்கள் கேட்கும் நபர்களிடம், தங்களின் வங்கி மற்றும் பணம் பரிமாற்றத்திற்கான ரகசிய எண்கள் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்க வேண்டாம் என எச்சரிக்கிறோம். இது தொடர்பாக 138 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பயணிகள் புகார்களைத் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : individuals ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!