×

நெல் கொள்முதல் செய்வதில் தாமதம்; சிபிஎம் கட்சியினருடன் இணைந்து விவசாயிகள் சாலை மறியல்

ஒரத்தநாடு, அக்.23: ஒரத்தநாடு புதூர் நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதலில் தாமதம் ஏற்படுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு புதுாரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக, நெல் கொள்முதல் பணியில் ஏற்பட்டுள்ள தொய்வால், சாலையோரங்களில் சுமார் இரண்டு கி.மீ. துாரத்திற்கு நெல்லை விவசாயிகள் குவித்து வைத்து காத்துக்கிடக்கின்றனர் இந்நிலையில், கடந்த அக்.9ம் தேதி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்து, உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவிட்டு சென்றார். ஆனால், அமைச்சர் வந்து விட்டு பிறகும் நிலைமை மாறவில்லை. நாள்தோறும் ஆயிரம் மூட்டைகளுக்கு குறைவாக நெல் கொள்முதல் செய்யப்பட்டதால், விவசாயிகள் அதிருப்தியடைந்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டும் முறையான பதில் இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், சி.பி.எம் ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில், நேற்று மதியம் ஒரத்தநாடு புதூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ் மற்றும் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் மூட்டைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பேரில், விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Oratanadu ,Oratanadu Budur ,Tanjavur district ,Oratanadu Pudar ,
× RELATED பெல் நிறுவன பிரிவுகளுக்குள்...