கோட்டை ஈஸ்வரன் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம்

ஈரோடு, டிச. 30: ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஈரோடு கோட்டை பகுதியில் உள்ள ஆருத்ர கபாலீஸ்வரர் (ஈஸ்வரன்) கோயிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக கொண்டாடப்படும். நடப்பாண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா நாளை (30ம் தேதி) நடைபெற உள்ளது. இதையொட்டி, நேற்று காலை 7 மணிக்கு ஸ்ரீ பிச்சாடனர் (பிச்சாண்டவர்) உற்சவமும், மாலை திருக்கல்யாண உற்சவமும் எளிமையாக நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று (30ம் தேதி) காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகமும், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பட்டு வஸ்திரம் சாற்றப்படுகிறது. பின்னர், சிவகாமசுந்தரி உடனமர் ஸ்ரீஆனந்தமாநடராஜர் பெருமானின் ஆருத்ரா தரிசனம் நடக்க உள்ளது. இதில், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், மாணிக்கவாசகருடன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு விடையாற்றி அபிஷேகம், ஸ்ரீ சோமஸ்கந்த பெருமானுக்கு மஞ்சள் நீராட்டும் நடக்கிறது.

இவ்விழாவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் நிர்வாகம், கட்டளைதாரர்கள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி நடத்தப்படுகிறது. பக்தர்களுக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதியில்லை. மாறாக தரிசனத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். ஆருத்ர தரிசனத்தில் பக்தர்கள் பூஜை பொருட்கள், அபிஷேக திரவியங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கோயில் செயல் அலுவலர் ரமணி காந்தன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>