×

கிணற்றில் தவறி விழுந்து இளம் பெண் பலி

நாமக்கல், நவ.30: நாமக்கல் அருகே தனிமையில் இருந்தபோது, காதலன் கண் முன் காதலி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சாவுக்கு காரணமான காதலன் கைது செய்யப்பட்டார். நாமக்கல் அருகே சின்னமுதலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மகள் நித்யாஸ்ரீ(18). இவர், கடந்த ஆண்டு ரெட்டிப்பட்டியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில், பிளஸ்2 படித்தார். அப்போது, உடன் படித்து வந்த எருமப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தைச் சேர்ந்த மாணவருடன் காதல் ஏற்பட்டது. பெற்றோருக்கு தெரியாமல் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

நேற்று முன்தினம் மாலை பெருமாப்பட்டி பகுதியில், மறைவான இடத்தில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.  அப்போது, அங்கு சிலர் நடந்து வருவது போல சப்தம் கேட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த காதல் ஜோடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. வேகமாக ஓடியதில் கால் இடறி, அருகில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் காதலி தவறி விழுந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த காதலன், சப்தம் போட்டு அருகில் உள்ளவர்களை அழைத்துள்ளார். உதவிக்கு ஆட்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் கயிறு கட்டி, காதலர் கிணற்றுக்குள் இறங்கினார்.
அப்போது, கயிறு அறுந்து காதலரும் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். கிணற்றில் 5 அடி ஆழமே தண்ணீர் இருந்ததால், காதலன் உயிர்தப்பினார். ஆனால், காதலி கிணற்றுக்குள் விழுந்ததில் அடிபட்டு உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த நாமக்கல் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் சடலமாக கிடந்த காதலியை மீட்டனர்.

இதுகுறித்து, அவரது பெற்றோர் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், தங்களது மகள் சாவுக்கு காரணமான 18வயது காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தனர். இதன்பேரில், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிந்து விசாரித்து காதலனை கைது செய்தார்.

Tags : well ,
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை