×

ஊத்தங்கரையில் அரசு நிர்ணயித்த விலைக்கு கரும்பு கொள்முதல் செய்ய கோரிக்கை

ஊத்தங்கரை, டிச.30: ஊத்தங்கரையில் அரசு நிர்ணயித்த விலைக்கு கரும்பை கொள்முதல் செய்ய வேண்டுமென கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊத்தங்கரை அருகே சாமல்பட்டி, வெள்ளையம்பதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, முழுநீள கரும்பு வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.
ஊத்தங்கரை பகுதியில் வழங்க இருக்கும் கரும்புகளை, இப்பகுதியில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அதிகாரிகள் கரும்பு விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஒரு கரும்புக்கு 20 முதல் 22 வரை விலை கொடுப்பதாக கூறினர்.

ஆனால், விவசாயிகள் அரசு 5 அடி நீளம் கொண்ட கரும்புக்கு 30 என விலை நிர்ணயித்து அரசாணை வெளியிட்ட நிலையில், அதிகாரிகள் குறைவாக விலைக்கு கேட்பதால் கரும்பு கொள்முதல் செய்ய மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கரும்பு சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு 2 லட்சத்திற்கு மேல் செலவாகிறது. அரசு நிர்ணயித்த 30க்கு கரும்பு கொள்முதல் செய்தால் மட்டுமே எங்களது செலவினங்களுக்கு கட்டுப்படியாகும்.

அதற்கு குறைவாக கொடுத்தால் நாங்கள் கடனாளியாக வேண்டி வரும். அதிகாரிகள் எங்களிடம் ₹20க்கும் கொள்முதல் செய்து விட்டு, ₹30க்கும் கொள்முதல் செய்ததாக கூறி பணத்தை சுருட்டி விடுவார்கள். எனவே, அரசு நிர்ணயித்த ₹30ஐ வழங்கி கரும்பை கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Government ,Uttaranchal ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...