×

கட்டுப்பாட்டு மையத்தில் தன்னிடம் புகார் அளித்த பகுதிக்கு நேரில் சென்று சீரமைப்பு பணிகளை முடுக்கி விட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, அக். 23: பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலக கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள எல்இ.டி திரைகள் மூலமாக நகரின் பல்வேறு இடங்களில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக நடைபெறுவதையும், மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கால்வாய்களில் மழை நீர் தடையின்றி செல்வதையும், முகத்துவாரத்தில் நீர் தடையின்றி கடலுக்கு செல்வதையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, 1913 என்ற உதவி எண்ணிற்கு பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை தானே நேரடியாக கேட்டறிந்ததுடன் உதவி எண்ணில் தன்னிடம் தொடர்பு கொண்ட புகார்களின் மீது மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் ஜெய்சங்கர் சாலை பகுதிக்கு துணை முதல்வர் நேரில் சென்று தேங்கிய மழை நீர் அகற்றப்பட்டதை பார்வையிட்டு, சீரமைப்பு பணிகளை முடுக்கி விட்டார்.

தொடர்ந்து ரூ.30 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி சார்பில் அண்மையில் தான் தொடங்கி வைத்த விருகம்பாக்கம் கால்வாய் சீரமைப்பு பணிகளின் காரணமாக நெற்குன்றம் பகுதியில் நீர் சீராக செல்வதையும் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, பணியின் முன்னேற்றம் குறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பெருங்குடி மண்டலம் செம்மொழி சாலை பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வரும் மேடவாக்கம் சந்திப்பு பகுதி, 191 வது வார்டு பகத்சிங் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்காமல் உடனுக்குடன் மோட்டார் பம்ப் உதவியுடன் நீரை அகற்றும் பணிகளை மேற்கொள்ளவும், நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறும், அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மழையின் தீவிரத்தை தொடர்ந்து கண்காணித்து சீரமைப்பு பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், மத்திய வட்டார துணை ஆணையர் கவுஷிக், தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Deputy ,Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,Greater Chennai Corporation ,
× RELATED விருகம்பாக்கம் பகுதியில் போதை மாத்திரை விற்ற ரவுடி கைது