×

தமிழகத்தில் ஏழ்மையை மிகவும் ஜாக்கிரதையாக அரசியல்வாதிகள் பாதுகாத்து வைத்துள்ளனர்

தஞ்சை, டிச. 29: தமிழகத்தில் அரசியல்வாதிகள் ஏழ்மையை மிகவும் ஜாக்கிரதையாக பாதுகாத்து வைத்துள்ளனர் என்று தஞ்சையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசினார். தஞ்சையில் சட்டமன்ற தேர்தலுக்கான மூன்றாம் கட்ட பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று ஈடுபட்டார். கீழவாசல் வெள்ளை பிள்ளையார் கோயில், அண்ணாநகர் ஆகிய இடங்களில் கமல்ஹாசன் பேசியதாவது: புதிய மாற்றத்துக்கு தமிழகம் தயாராகி விட்டது. தமிழகத்தில் அரசியல்வாதிகள் ஏழ்மையை மிகவும் ஜாக்கிரதையாக பாதுகாத்து வைத்துள்ளனர். ஏழ்மையை வைத்து தான் அவர்களிடம் ஓட்டை காசு கொடுத்து வாங்க முடியும். ஏழ்மை நீங்கி விட்டால் மக்கள் சுயமாக ஓட்டு போட்ட துவங்கி விடுவர். எம்ஜிஆரை நான் கையில் எடுக்கவில்லை. அவர் தான் என்னை முதலில் கையில் எடுத்து தோளில் சுமந்தார். இதை பற்றி பேசுபவர்கள் சரித்தரங்களையும், நிகழ்வுகளையும் பார்ப்பது கிடையாது. தேர்தல் நேரத்தில் மட்டுமே பேசுவர். எலெக்சன் முடிந்தவுடன் கலெக்சனுக்கு சென்று விடுவர்.

ஒரு காலத்தில் சரித்திரத்தில் தலைநகராக விளங்கிய தஞ்சை என்று திறந்தவெளி சாக்கடை ஓடும் நகராக உள்ளது. அதை மாற்றியே ஆக வேண்டும். பல நல்ல நேர்மையான திட்டங்களுடன் வந்துள்ளோம். வெறும் அடுக்குமொழி பேச்சு அல்ல, அலங்கார பேச்சல்ல, உங்களை கொஞ்ச நேரம் சந்தோஷப்படுத்தி விட்டு அடுத்த தேர்தலில் மட்டும் தலையை காட்டும் ஆட்கள் அல்ல நாங்கள். என்னுடன் அரசியலுக்கு வந்துள்ளவர்கள் அனைவரும் தனக்கென்று தொழில் உள்ளவர்கள். அப்படியிருக்கும்போது இங்கு வந்து சம்பாதிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

ஒரத்தநாட்டில் கமல்ஹாசன் பேசுகையில், ஒரத்தநாட்டில் மழை காலங்களில் கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகள் மழையில் நனைந்து வீணானது. ஆனால் டாஸ்மாக் கடையில் உள்ள பாட்டில்களை பாதுகாப்பாக எடுத்து சென்று குடோனில் வைத்தனர். தவறான அறிவுரைகள் சொல்லும் தலைவர்கள் மாற வேண்டும். விவசாயிகளை மதிக்கிற அரசு இருக்க வேண்டும். மக்கள் பலம் என்பது உங்கள் வாக்குரிமை என்றார். பட்டுக்கோட்டையில் கமல்ஹாசன் பேசியதாவது: எங்கள் கூட்டங்களுக்கு பெருமை சேர்ப்பதே தாய்மார்கள் கைக்குழந்தையுடன் வருவது தான். உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். இந்த கோவிட் காலத்தில் குழந்தைகளை நீங்கள் அழைத்து வராதீர்கள். அப்படியே சிறுவர்களை நீங்கள் அழைத்து வந்தால் அவர்களுக்கு முககவசம் அணிய வேண்டுமென வலியுறுத்துங்கள் என்றார்.


Tags : Tamil Nadu ,politicians ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...