×

இந்த நாள் மீண்டும் பணி நியமனம் கோரி மக்கள் நலப்பணியாளர்கள் 4 வழிச்சாலையில் மறியல்

விருதுநகர், டிச.29: விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பாக மக்கள் நலப்பணியாளர்கள் மீண்டும் பணி நியமனம் கோரி நான்கு வழிச்சாலையில் மறியல் போராட்டம் நடத்திய 230 பேரை போலீசார் கைது செய்தனர்.  தமிழகத்தில் 13,500 மக்கள் நலப்பணியாளர்கள் கடந்த 2.7.1990ல் பணி நியமனம் செய்யப்பட்டனர். 1991ல் பணி நீக்கம், 1997ல் மீண்டும் பணிநியமனம், 2001ல் பணி நீக்கம், 2006 பணி நியமனம், 2011ல் பணி நீக்கம் என 3 முறை நியமனமும், 3 முறை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த 2011ம் ஆண்டு முதல் 9 ஆண்களாக வாழ்வாதாரம் இழந்து சிரமத்தில் உள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் விதமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெற்று மீண்டும் பணி வழங்க கோரி போராட்டத்தை துவக்கி உள்ளனர்.  விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாநில தலைவர் செல்லப்பாண்டியன் தலைமையில் மாவட்ட தலைவர் அருள்ராஜ் முன்னிலையில் தர்ணா போராட்டத்தை துவக்கினர். மாநில துணைப்பொதுச் செயலாளர் செல்வகுமார், பொதுச்செயலாளர் புதியவன் விளக்க உரையாற்றினர். அப்போது திடீரென நான்கு வழிச்சாலையில் சாலைமறியல் போராட்டம் செய்தனர். மீண்டும் பணி வழங்க கோரி கோஷம் எழுப்பினர். இம்மறியலால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மறியலில் ஈடுபட்ட 95 பெண்கள் உட்பட 230 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Route 4 ,Welfare Workers Strike ,
× RELATED பனகல் பூங்காவில் சுரங்கம் அமைக்கும்...