திருப்பூர்,டிச.29: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அக்கட்சியினரால் நேற்று கொண்டாடப்பட்டது. இதன்படி, திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில், காலை 6 மணிக்கு அங்கேரிபாளையம் மாகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜையும், 9 மணிக்கு திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் ஜி.கே.வாசன் பெயரில் சிறப்பு பூஜையும் நடத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூப்பனார் பவனில் நடந்த நிகழ்ச்சியில், மாற்றுக்கட்சியை சேர்ந்த 150 பேர், அக்கட்சிகளிலிருந்து விலகி, த.மா,க.,வில் தங்களை இணைத்து கொண்டனர். பின்னர் செங்கப்பள்ளியில் உள்ள மகிழ்ச்சி கருணை இல்லத்தில் உள்ள முதியோர் 50 நபர்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்கி, அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில், கட்சி கொடியேற்றி, பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பின்னர் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளுக்கு மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார்.